கைது நடவடிக்கையை எதிர்த்து ஹேமந்த் சோரன் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு - இன்று விசாரணை

பணமோசடி வழக்கில் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

Update: 2024-02-02 02:12 GMT

டெல்லி,

ஜார்க்கண்டில் காங்கிரஸ் - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் செயல்பட்டு வந்தார்.

இதனிடையே, நிலமோசடி மூலம் கோடிக்கணக்கான பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும், நிலக்கரி சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு செய்தது.

சட்டவிரோத பண பரிமாற்றம், நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்குகள் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இறுதியில் கடந்த 20ம் தேதி அமலாக்கத்துறை முன் ஹேமந்த் சோரன் ஆஜரானார். அவரிடம் வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரன் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 36 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து, பணமோசடி வழக்கில் ஹேமந்த் சோரனிடம் நேற்று முன் தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீட்டிற்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை மேற்கொண்டனர். பலமணி நேரம் நடந்த விசாரணைக்கு பின் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அமலாக்கத்துறை கைது செய்வதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு முதல்-மந்திரி பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார்.

அதேவேளை, கைது நடவடிக்கையை எதிர்த்து ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று காலை விசாரணைக்கு வந்தது. ஆனால், ஹேமந்த் சோரன் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் உத்தியை மாற்றி சுப்ரீம் கோர்ட்டில் முறையிட முடிவெடுத்தனர். இதற்காக ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை திரும்பப்பெற்றனர். இதனை தொடர்ந்து ஹேமந்த் சோரன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து ஹேமந்த் சோரன் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பரிதிவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணை நடைபெற உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்