முன்னாள் ராணுவ வீரர்களுக்கு உதவிகள் செய்வது அவசியம்; கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேச்சு
முன்னாள் ராணுவ வீரர்களுக்கு உதவிகள் செய்வது அவசியம் என்று கவர்னர் தாவர்சந்த் கெலாட் கூறியுள்ளார்.;
பெங்களூரு:
கொடி நாள்
ராணுவ வீரர்கள் நலன் மறுவாழ்வுத்துறை சார்பில் கொடிநாள் விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-
நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்களில் பலர் தங்களின் உயிர்களை தியாகம் செய்துள்ளனர். அவர்களுக்கு எனது வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்கள் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பணி வழங்க வேண்டும். கொடிநாள் என்பது ராணுவ வீரர்களுக்கு கவுரவம் செலுத்தும் நிகழ்வு ஆகும்.
உயிர்களை காக்கிறார்கள்
இந்திய ராணுவம் மிக சிறப்பானது என்று உலகம் போற்றுகிறது. நமது ராணுவ வீரர்கள் ஒவ்வொரு துறையிலும் சிறப்பான அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளனர். நமது எல்லைகளை காப்பதுடன் நாட்டில் பேரிடர்கள் ஏற்படும்போது மக்களின் உயிர்களை காக்கிறார்கள். நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டு பல வீரர்கள் உடலில் காயம் ஏற்பட்டு ஊனம் அடைந்துள்ளனர். அத்தகைய முன்னாள் ராணுவ வீரர்களுக்கு நாம் உதவிகளை செய்வது அவசியம்.
ராணுவ வீரர்களின் மறுவாழ்வுக்கு மத்திய-மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளன. பண்டிகைகளின்போது மக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் அதை கொண்டாடுகிறோம். ஆனால் ராணுவ வீரர்கள் நாட்டை காக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள். இத்தகைய நேரத்தில் அவர்களுக்கு மன வலிமையை ஏற்படுத்த பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை வீரர்களுடன் கொண்டாடுகிறார்.
இவ்வாறு தாவர்சந்த் கெலாட் பேசினார்.
இந்த விழாவில் கவர்னர் இந்த ஆண்டுக்கான கொடியை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து கொடிநாள் நிதி வசூலித்த மாவட்டங்களுக்கு அவர் விருது வழங்கினார். இந்த விழாவில் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா, ராணுவ உயர் அதிகாரி தீபக் நாயுடு உள்படபலர் கலந்து கொண்டனர்.