யு.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ. அமைப்புகளுக்கு பதிலான உயர்கல்வி கமிஷன் மசோதா விரைவில் தாக்கல் - மத்திய கல்வி மந்திரி தகவல்
யு.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ. உள்ளிட்ட அமைப்புகளுக்கு பதிலாக உருவாக்கப்படும் இந்திய உயர்கல்வி கமிஷன் மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.;
புதுடெல்லி,
உயர் கல்வித்துறையை ஒரே குடையின் கீழ் ஒழுங்குபடுத்துவதற்காக இந்திய உயர்கல்வி கமிஷன் (எச்.இ.சி.ஐ) அமைக்க மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.), இந்திய தொழில்நுட்பக்கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) மற்றும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) போன்ற அமைப்புகளுக்கு பதிலாக ஒரே அமைப்பாக இது அமைக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது.
இந்த கமிஷன் அமைப்பதற்கான வரைவு மசோதா ஒன்று கடந்த 2018-ம் ஆண்டு உருவாக்கி பொதுமக்களின் கருத்துக்காக வெளியிடப்பட்டது. பின்னர் 2021-ம் ஆண்டு மத்திய கல்வி மந்திரியாக பதவியேற்ற தர்மேந்திர பிரதான், இந்த மசோதாவை இறுதி செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-
3 முக்கிய பணிகள்
ஒழுங்குமுறை, அங்கீகாரம் மற்றும் தொழில்முறை தரங்களை அமைத்தல் ஆகிய 3 முக்கிய பணிகளை இந்திய உயர்கல்வி கமிஷன் மேற்கொள்ளும்.
இதில் நான்காவது முக்கிய பணியாக கருதப்படும் நிதியளித்தல், இந்த கமிஷனின் கீழ் இருக்காது. அதற்கான சுயாட்சி அதிகாரம் நிர்வாக அமைச்சகத்திடம் இருக்கும்.
இந்திய உயர்கல்வி கமிஷன் மசோதாவை விரைவில் நாடாளுமன்றத்தில் கொண்டு வருவோம். அதன் பிறகும் நிலைக்குழு ஆய்வு இருக்கும் ஆனால் அனைத்திற்கும் விரிவான பணிகளை துவங்கி விட்டோம்.
இந்த கமிஷனிடம் மூன்று முக்கிய பணிகள் உள்ளன. முதலாவதாக, பல்கலைக்கழக மானியக் குழு மேற்கொள்ளும் ஒழுங்குமுறைப்பணி. இது ஏற்கனவே அதன் மட்டத்தில் பல உள்சீர்திருத்தங்களைத் தொடங்கியுள்ளது.
மருத்துவம், சட்ட கல்லூரிகள் விலக்கு
இரண்டாவதாக 2 நிலைகளில் அங்கீகாரம். அதாவது கல்லூரிகளின் அங்கீகாரம், மற்றும் திட்டங்கள் மற்றும் படிப்புகளின் அங்கீகாரம். தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலை மறுசீரமைப்பதற்காக ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழுவை நாங்கள் அமைத்துள்ளோம். அது பரிந்துரைகளையும் வழங்கி உள்ளது.
மூன்றாவதாக, என்ன கற்பிக்கப்படும், அது எப்படி கற்பிக்கப்படும் என்பது பற்றிய தொழில்முறை தரநிலைகளை அமைப்பது ஆகும்.
மருத்துவம் மற்றும் சட்டக்கல்லூரிகளை தவிர அனைத்து கல்லூரிகளும் இந்திய உயர்கல்வி கமிஷனின் கீழ் கொண்டு வரப்படும்.
இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறினார்.