வடஇந்தியாவில் கடும் பனி: 8 மணிநேரம் வரை ரெயில்கள் காலதாமதம்; பயணிகள் அவதி
வடஇந்தியாவில் கடும் பனியால் 1 முதல் 8 மணிநேரம் வரை ரெயில் சேவையில் காலதாமதம் ஏற்பட்டு, பயணிகள் அவதியடைந்தனர்.;
புதுடெல்லி,
வடஇந்தியாவில் குளிர்காலத்தில் நிலவும் கடும்பனியானது தொடர்ந்து பரவி வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டின் தலைநகர் டெல்லியில் பாலம் பகுதியில் 500 மீட்டர் தொலைவுக்கு தெளிவான வானிலை காணப்படும்.
அரியானாவின் ஹிசார் பகுதி மற்றும் திரிபுராவின் கைலாஷாஹர் பகுதிகளில் 50 மீட்டர் தொலைவுக்கே தெளிவான வானிலை காணப்படும். உத்தரகாண்டின் டேராடூன், பீகாரின் பூர்னியா ஆகிய பகுதிகளில் 500 மீட்டர் தொலைவுக்கு தெளிவான வானிலை காணப்படும் என தெரிவித்து உள்ளது.
வருகிற 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையில் வடமேற்கு இந்தியாவில் மேற்கு புறத்தில் இருந்து பலத்த குளிர் காற்று வீச கூடும். இதனால், வடமேற்கு இந்திய பகுதிகளில் குளிரலை பரவல் காணப்படும். அது நாளை மறுநாள் (19-ந்தேதி) உச்சம் தொடும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
கடும் குளிரை முன்னிட்டு பல பகுதிகளில் பனிப்படலம் சூழ்ந்தது போன்று வடஇந்தியா முழுவதும் காணப்படுகிறது. இதனால், தெளிவற்ற வானிலை உள்ளது.
இதனையடுத்து, வடக்கு ரெயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் 1 முதல் 8 மணிநேரம் வரை பல்வேறு ரெயில்கள் இன்று காலதாமதமுடன் வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவற்றில் கோரக்பூர்-பதிண்டா கோரக்தம் எக்ஸ்பிரஸ் ரெயில், டாக்டர் அம்பேத்கார் நகர்-ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா மால்வா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியன 1 மணிநேரம் காலதாமதமுடனும், அதிக அளவாக ஹவுரா-புதுடெல்லி பூர்வா எக்ஸ்பிரஸ் ரெயில் 8 மணிநேரமும் காலதாமதமுடன் வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காமக்யா-டெல்லி பிரம்மபுத்ரா மெயில், விசாகப்பட்டினம்-புதுடெல்லி ஆந்திர பிரதேச எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவை 4 மணிநேரமும், எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-புதுடெல்லி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் 1.30 மணிநேரமும் காலதாமதமுடன் வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி பயணி ஒருவர் கூறும்போது, நாங்கள் கடும் குளிருடன் போராடி வருகிறோம். இதனை கேட்பதற்கு என்று யாரும் இல்லை. அரசு ஏதேனும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
பீகாருக்கு பயணம் செய்யும் மற்றொரு பயணி கூறும்போது, ரெயில் நிலையத்தில் 2 மணிநேரம் காத்திருக்கிறேன். ரெயில் வருவது பற்றிய எந்த தகவலும் இல்லை. ரெயில் வருகை பற்றிய காலஅட்டவணை விவரங்களை யாரும் கூறவில்லை என வேதனையுடன் தெரிவித்து உள்ளார்.