பாகிஸ்தானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 34 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 34 பேர் உயிரிழந்தனர். 100 பேருக்கு காயம் ஏற்பட்டது.

Update: 2023-06-11 21:16 GMT

கோப்புப்படம்

இஸ்லாமாபாத்,

அண்டை நாடான பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா, பஞ்சாப் மாகாணங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் மழையால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டது.

இந்தநிலையில் நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பன்னு, டேரா, கரக் மற்றும் லக்கி மார்வார்ட் ஆகிய பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் சுமார் 70 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.

34 பேர் உயிரிழப்பு

இதனையடுத்து தயார் நிலையில் இருந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் அந்த பகுதிகளுக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்தவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். மேலும் அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

எனினும் வீடுகள் இடிந்து விழுந்ததில் சிறுவர்கள், பெண்கள் உள்பட 34 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயம் அடைந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரதமர் இரங்கல்

இந்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலர் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் மழையால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து கேட்டறிந்த அவர் நிவாரண பணிகளை முடுக்கி விடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்