மராட்டியத்தில் கனமழைக்கு 17 பேர் பலி: நடு ஆற்றில் 15 பக்தர்கள் பரிதவிப்பு

மராட்டியத்தில் பெய்து வரும் கனமழைக்கு கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது உள்ளிட்ட துயர சம்பவங்களில் 17 பேர் பலியானார்கள். நடு ஆற்றில் 15 பக்தர்கள் சிக்கி தவித்து வருகிறார்கள்.

Update: 2022-07-13 23:06 GMT

மும்பை,

மராட்டியத்தில் பருவமழை தீவிரமடைந்து, கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்றும் தலைநகர் மும்பை உள்பட மாநிலத்தில் பல மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்தது. மும்பையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

அதேவேளையில் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்த மழையால் உயிர் சேதம் ஏற்பட்டது. பால்கர் மாவட்டத்தில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று மழை கொட்டித்தீர்த்தது. அங்கு பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. வசாயில் நிலச்சரிவு காரணமாக ஒரு வீடு மண்ணில் புதைந்தது. இதில் தந்தை- மகளான அனில் சிங்(வயது45), ரோஷினி (16) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் தாய்-மகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர்.

கோண்டியா மாவட்டம் புஜாரிடோலா கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் அஷிஷ் தர்மராஜ் பட்கே(23), சஞ்சு பிரமோத் பட்கே (23) ஆகிய 2 பேர் தங்களது விவசாய நிலங்களுக்கு சென்ற போது, அங்குள்ள கால்வாயை கடக்க முயன்றனர். கால்வாயில் மழை வெள்ளம் சீறி பாய்ந்து கொண்டு இருந்ததால், அவர்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டனர்.

நாசிக் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் வெவ்வேறு சம்பவங்களில் 6 வயது சிறுமி உள்பட 6 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

புனேயில் முக்தா ஆற்றுபாலத்தை கடக்க முயன்ற நிகில் கவுசிக் (25) என்ற வாலிபர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பிணமாக மீட்கப்பட்டார். மற்றொருவரான ஆஷிஷ் ரதோட் (26) வெள்ளத்தில் சிக்கிய போது மின்கம்பத்தை தொற்றி கொண்டதால், அவரை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

மத்திய பிரதேச மாநிலம் முல்தாய் பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் நேற்று முன்தினம் மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டம் சட்ராபூர் கிராமம் நோக்கி வந்தபோது அவர்களது கார் வெள்ளம் சூழ்ந்த தரைப்பாலத்தை கடக்க முயன்றது. இதில் அந்த கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இந்த துயர சம்பவத்தில் கார் மீட்கப்பட்டபோது, அதற்குள் ரோஷிணி சவுதிகர், அவரது மகன் தர்ஷ் சவுதிகர் மற்றும் கார் டிரைவர் லீலாதர் ஹிவாரே ஆகிய 3 பேர் பிணமாக கிடந்தனர். மேலும் 3 பேர் வெள்ளத்தில் மாயமாகி விட்டனர். மற்ற 2 பேர் நீந்தி கரை சேர்ந்தனர்.

மேற்கண்ட சம்பவங்களில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாயமானவர்கள் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதேபோல பண்டாரா மாவட்டத்தில் வைன்கங்கா ஆற்றின் நடுப்பகுதியில் உள்ள மட்கி கோவிலுக்கு குருபூர்ணிமாவையொட்டி பக்தர்கள் படகில் சென்றனர். ஆற்றில் வெள்ளம் அதிகரித்ததால் அவர்களால் திரும்பி வரமுடியவில்லை. இதனால் 15 பக்தர்கள் நடு ஆற்றில் உள்ள கோவிலில் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை மீட்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்