கேரளாவில் கனத்த மழை - ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டவர் பலி

இடுக்கி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பலத்த காற்றுடன் கனத்த மழை பெய்து வருகிறது.

Update: 2024-07-18 09:39 GMT

திருவனந்தபுரம்,

கேரளாவில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பலத்த காற்றுடன் கனத்தமழை பெய்து வருகிறது. இரவு பகல் எந்நேரமும் கனத்த மழை இடைவிடாமல் பெய்து வருகிறது. இடுக்கி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் பெய்த மழை காரணமாக 25 வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

மேலும் மாங்குளம் பகுதியில் உள்ள தாள கண்டம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சுனீஸ் என்பவர் பலியானார். கன மழை காரணமாக இடுக்கி மாவட்டத்தில் இரண்டு நிவாரண முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன. மழையினால் பாதிக்கப்பட்ட 38 பேர் இந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்,

அடிமாலி குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கனத்த மழையில் சாலையோரம் இருந்த மிகப்பெரிய மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக அடிமாலி அடுத்துள்ள கல்லார் குட்டி அணைக்கட்டு நிரம்பியது, இதைதொடர்ந்து அந்த அணைக்கட்டின் நான்கு மதகுகளும் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனையொட்டி சுற்றுலா பயணிகள் வருவதற்கு மறுஅறிவிப்பு வரும் வரை மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மூணார் அடுத்துள்ள கேப் ரோடு பகுதி உள்ளிட்ட மலையோர பகுதிகளில் இரவு நேர பயணம் தடை செய்யப்பட்டுள்ளது.

மூணார் போன்ற சுற்றுலா தலங்களில் அணைக்கட்டுகளில் சுற்றுலா பயணிகளுக்கு நடத்தும் படகு சவாரி கனத்த மழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது, கனத்த மழை தொடர்ந்து இருப்பதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. மரங்கள் முறிந்து விழுந்த காரணத்தால் மாவட்டத்தில் பல நகரங்களில் மின்வெட்டு ஏற்பட்டு பொதுமக்கள் இருளில் கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்