இமாச்சல பிரதேசத்தில் கனமழை; 115 சாலைகள் மூடல்

கனமழை காரணமாக இமாச்சல பிரதேசத்தில் 115 சாலைகள் மூடப்பட்டுள்ளன.;

Update: 2024-07-04 12:05 GMT

சிம்லா,

இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு இன்று கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இதன்படி இமாச்சல பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சிம்லா வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இமாச்சல பிரதேசத்தில் இன்று பெய்த கனமழையால் மாநிலம் முழுவதும் சுமார் 115 சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதன்படி மண்டி பகுதியில் 107 சாலைகளும், சம்பா பகுதியில் 4 சாலைகளும், சோலன் பகுதியில் 3 சாலைகளும், கங்க்ராவில் ஒரு சாலையும் மூடப்பட்டுள்ளன. மேலும் மழை காரணமாக மாநிலம் முழுவதும் சுமார் 212 மின் மாற்றிகளில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலைகளில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மலைப்பகுதிகளில் சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்திற்கு வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்