பெங்களூருவில் 2-வது நாளாக சாரல் மழை; 10 ஆண்டுகளுக்கு பிறகு கடும் குளிர் நிலவுகிறது

மாண்டஸ் புயல் எதிரொலியாக பெங்களூருவில் 2-வது நாளாக சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் 10 ஆண்டுகளுக்கு பிறகு கடும் குளிரும் நிலவி வருகிறது.

Update: 2022-12-10 18:45 GMT

பெங்களூரு:

பரவலாக மழை

தமிழ்நாட்டில் மாண்டஸ் புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. கடலோர கிராமங்களில் கடல் சீற்றத்தால் தண்ணீர் புகுந்து உள்ளது. இந்த நிலையில் மாண்டஸ் புயல் எதிரொலியாக தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையை ஒட்டி உள்ள பெங்களூருவிலும் 2 நாட்கள் பரவலாக மழை பெய்யும் என்று கர்நாடக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் பெங்களூருவில் சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.

விடிய, விடிய மழை தூறிக்கொண்டே இருந்தது. இந்த நிலையில் நேற்றும் 2-வது நாளாக பெங்களூருவில் சாரல் மழை பெய்தது. குறிப்பாக ராஜாஜிநகர், மெஜஸ்டிக், மாகடி ரோடு, விஜயநகர், பசவேஸ்வரா நகர், விதான சவுதா, கப்பன் பார்க், சிவாஜிநகர், ஹெப்பால், கன்டோன்மெண்ட், காமாட்சிபாளையா, கெங்கேரி, மல்லேசுவரம், யஷ்வந்தபுரம் உள்பட நகரின் அனைத்து பகுதியிலும் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். சாலையில் நடமாடியவர்கள் குடைகளை பிடித்தபடி சென்றதை காண முடிந்தது.

வாட்டி வதைக்கும் குளிர்

மேலும் மழையுடன் சேர்ந்து பெங்களூருவில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. அதுேபால் கடும் குளிரும் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வெளியே செல்பவர்கள் ஸ்வெட்டர் அணிந்து கொண்டு தான் வருகிறார்கள். கடந்த 2 நாட்களாக பெங்களூரு நகரில் சூரிய வெளிச்சமே வரவில்லை. நகர் முழுவதும் குளு,குளு சீதோஷ்ண நிலை தான் நிலவி வருகிறது. பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் பகல் நேரத்திலும் கூட வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனம் ஓட்டிகள் செல்கின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெங்களூருவில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் மக்கள் சூடான பானங்களை வாங்கி குடித்து குளிரில் இருந்து தற்காத்து வருகிறார்கள். 19 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி இருந்தது.

மேலும் 5 நாட்களுக்கு மழை

மாண்டஸ் புயல் கரையை கடந்து விட்டாலும் கூட பெங்களூரு, சிக்பள்ளாப்புரா, துமகூரு, கோலார், மைசூரு உள்பட 7 தென்கர்நாடக மாவட்டங்களில் அடுத்த 5 நாட்கள் சாரல் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்