கர்நாடகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்
கர்நாடகத்தில் மேலும் 5 நாட்கள் கனமழை நீடிக்கும் என்றும், பெங்களூருவுக்கு ‘மஞ்சள் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்தும் வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது.
பெங்களூரு:-
கனமழை
கர்நாடகத்தில் பெங்களூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் ஆலங்கட்டி மழையும், சில பகுதியில் சூறை காற்றுடன் பலத்த மழையும் கொட்டியது. கடந்த 2 நாட்களில் பெய்த கனமழைக்கு
மாநிலத்தில் இதுவரை 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.மேலும் தொடர் மழையால் மின் கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.இந்த நிலையில் தலைநகர் பெங்களூருஉள்பட சில மாவட்டங்களில் அடுத்த5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் 5 நாட்கள் நீடிக்கும்
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கர்நாடகத்தில் தென்மாவட்டங்களில் பெங்களூரு, குடகு, சிவமொக்கா, சிக்கமகளூரு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும், கடலோர மாவட்டங்களிலும் மேலும் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும். ஓரிரு இடங்களில் மிதமான மழையும், சில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யலாம்.
பெங்களூருவை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் லேசானது முதல் மிதமான மழையும், இடியுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. பெங்களூருவில் அதிக கனமழை பெய்யும் என்பதை குறிக்கும் 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.