கேரளாவில் கனமழைக்கு 4 பேர் உயிரிழப்பு: மரங்கள் வேரோடு சாய்ந்து வீடுகள் சேதம்

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் மரங்கள் வேரோடு சாய்ந்து வீடுகள் சேதம் அடைந்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.

Update: 2023-07-05 10:20 GMT

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இருப்பினும் கடந்த இரண்டு நாட்களாக பருவமழை அதிக அளவில் பெய்து வருகிறது. குறிப்பாக மலையோர மாவட்டங்களில் மிக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் காட்டாற்றுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலங்களில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளத்தில் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது. மழையால் சில வீடுகளும் இடிந்துள்ளன. மழை பாதிப்பிற்கு கேரளாவில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கோட்டையம் மாவட்டம் முந்தகையம் என்கிற ஊரில் பணிக்கு சென்ற தோட்டத்து தொழிலாளர்கள், காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து சென்ற உள்ளூர் பொதுமக்கள் உடனடியாக கயிறு கட்டி 17 பேரையும் பத்திரமாக மீட்டனர். இதனிடையே கனமழையின் காரணமாக திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் இடுக்கி, கண்ணூர் மாவட்டங்களில் 20 சென்டிமீட்டருக்கு மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதால் ரெட் அலெர்ட் விடப்பட்டுள்ளது.

47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கேரளாவில் தற்போது பருவமழை வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தின் அனைத்து தாலுகாவிலும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு, அதிகாரிகள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பருவமழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அத்துடன் இடுக்கி, எர்ணாகுளம், கண்ணூர்,கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் இடுக்கியில் இரவு நேர பயணத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மழையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு கடலோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்