வடமாநிலங்களில் கனமழை; பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு

பஞ்சாப், அரியானா உள்ளிட்டட வடமாநிலங்களில் கனமழைக்கு பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வடைந்து உள்ளது.

Update: 2023-07-11 02:57 GMT

புதுடெல்லி,

நாட்டின் வடமாநிலங்களில் பருவமழை பொழிவு மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்து உள்ளது. டெல்லி, அரியானா, இமாசல பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் போன்ற வடமாநிலங்களில் கன முதல் தீவிர கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டு இருந்தது.

இதன்படி, டெல்லியில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த 8-ந்தேதி கனமழை பெய்தது. இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில், நேற்று முன்தினம் காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணிநேரத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 153 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இதனால் டெல்லிவாசிகளுக்கு அசவுகரியம் ஏற்பட்டு உள்ளது என தெரிவித்து இருந்தது. இதனால், கடந்த 1982-ம் ஆண்டு ஜூலைக்கு பின்பு அதிக மழை பொழிவு ஏற்பட்டு உள்ளது.

லடாக் யூனியன் பிரதேசத்தில் லே நகரில் கனமழை பெய்தது. கார்யூக் பகுதியில் நேற்று முன்தினம் மாலை பெய்த கனமழையால், 450 ஆண்டுகால கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. வேறு சில வீடுகளும் பாதிப்படைந்து உள்ளன. இந்த பகுதியில், 9 மணிநேரத்தில் 14.5 மி.மீ. மழை பெய்து உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

கடந்த 2010-ம் ஆண்டு மேகவெடிப்பு ஏற்பட்டபோது கூட இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. எனினும், இந்த முறை பழைய கட்டிடங்களுக்கு நிறைய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.

இந்த நிலையில், வடமாநிலங்களில் நிலச்சரிவு மற்றும் மழை தொடர்பான சம்பவங்களால் கடந்த 2 நாட்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்து உள்ளது. இமாசல பிரதேசத்தில் மண்டி, கிண்ணார் மற்றும் லஹால்-ஸ்பிடி நகரங்களில் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கைகளும் விடப்பட்டு உள்ளன.

டெல்லியில் யமுனா ஆற்றில் அபாய அளவை கடந்து வெள்ள நீர் செல்கிறது. இதனால், நீர்மட்டம் 206.24 மீட்டராக உள்ளது என மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்து உள்ளது.

பஞ்சாப் மற்றும் அரியானாவிலும் தொடர்ந்து 3-வது நாளாக கனமழை பெய்து உள்ளது. இதில் 9 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். இதன் எதிரொலியாக வருகிற 13-ந்தேதி வரை பள்ளிகளை மூடும்படி பஞ்சாப் அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

வீடுகள், கட்டிடங்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டு காணப்படுகின்றன. கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் வெள்ளத்தில் மூழ்கியும், அடித்து செல்லப்படும் காட்சிகளும் வெளிவந்து உள்ளன. இதனால், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி அரசு வேண்டுகோளாக கேட்டு கொண்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்