குடகில் பலத்த மழை மின் கம்பம், மரங்கள் முறிந்து விழுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

குடகில் பெய்த பலத்த மழையால் மின் கம்பம், மரங்கள் முறிந்து விழுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Update: 2023-05-18 18:45 GMT

குடகு-

குடகில் பெய்த பலத்த மழையால் மின் கம்பம், மரங்கள் முறிந்து விழுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டது.

பலத்த மழை

கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் குடகு மாவட்டமும் ஒன்று. நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை பெய்த கன மழையில் குடகு மாவட்டத்தில் பெரும்பாலான இடங்கள் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டது. குறிப்பாக விராஜ்பேட்டை தாலுகா நாபொக்லு கிராமத்தில் மழையால், சில வீடுகளுக்குள் நீர் புகுந்தது. இதேபோல மரங்கள் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்ததில் மின் இணைப்பு தடைப்பட்டது.

மேலும் நாபொக்லுவில் உள்ள முக்கிய சாலையில் மின் கம்பம் ஒன்று சாய்ந்து விழுந்தது. இதில் சாலையில் மேல் சென்று கொண்டிருந்த மின் கம்பிகள், அறுந்து விழுந்தன. இதனால் அந்த சாலையில் வாகனம் செல்ல முடியாமல் போனது, இதை அறிந்த மின்துறை ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்தனர். இதனால் நாபொக்லு கிராமத்தில் நேற்று காலை வரை மின் தடை ஏற்பட்டது.

இதேபோல மரங்கள் முறிந்து வீடுகள் மீது விழுந்ததால் மேற்கூரைகள் பாதிக்கப்பட்டன. மேலும் இந்த கன மழையால் காபி தோட்டங்களில் மழை நீர் தேங்கும் நிலை ஏற்பட்டது.

சாலையை சீரமைக்க கோரிக்கை

இதனால் ஏராளமான  காபி செடிகள் அழுகின. மேலும் வனப்பகுதியையொட்டி சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் தொழிலாளிகளால் வேலைக்கு செல்ல முடியாமல் போனது. இந்நிலையில் நேற்று பாதிக்கப்பட்ட இடங்களை வருவாய்துறை அதிகாரிகள், தாலுகா பஞ்சாயத்து அதிகாரிகள், போலீசார் சென்று பார்ைவயிட்டனர்.

அப்போது மக்கள் தரமான மின் கம்பங்கள் அமைக்கும்படி கேட்டு கொண்டனர். சாலைகளில் மழை நேரங்களில் தண்ணீர் பெருகுவதால் விபத்து ஏற்படுகிறது. எனவே குண்டும், குழியுமான சாலைகளை சீரமைத்து கொடுக்கும்படி கோரிக்கை வைத்தனர். இதை ஏற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்