சிக்கமகளூருவில் கனமழை; 4 வீடுகள் இடிந்தன
சிக்கமகளூருவில் பெய்த கனமழையால் 4 வீடுகள் இடிந்தன.;
சிக்கமகளூரு-
சிக்கமகளூருவில் கடந்த 2 நாட்களாக பெய்த பலத்த மழையால் 4 வீடுகள் இடிந்தன. இதைத்தொடர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு மாவட்ட கலெக்டர் மீனா நாகராஜ் அறிவுறுத்தி உள்ளார்.
சிக்கமகளூருவில் மழை
கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால் இதுவரையில் போதிய அளவு மழை பெய்யவில்லை. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சிக்கமகளூரு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. பலத்த மழை காரணமாக துங்கா, பத்ரா, ஹேமாவதி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் எகட்டி, பத்ரா அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது.
மேலும் அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒன்னமன் அருவி, கல்லத்தி அருவி, சிரிமனே அருவி, ஹெப்பே அருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
பலத்த மழை காரணமாக மாவட்டத்தில் 4 வீடுகள் இடிந்துள்ளன. என்.ஆர்.புரா தாலுகா சாலகானி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான வீடு முற்றிலும் இடிந்து சேதம் அடைந்தது. தரிகெரே தாலுகாவில் சந்திரபாபு, நடேசன் ஆகியோருக்கு சொந்தமான வீடுகளும் இடிந்தன. மேலும் பலத்த மழையும் சூறாவளி காற்றும் வீசியதால் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளன. இதனால் பல்வேறு கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலையிலும் இடைவிடாது மழை பெய்தது. தொடர் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல தேங்கி நிற்பதால் அவற்றில் யாரும் இறங்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பாதுகாப்பான இடங்களுக்கு...
மேலும் ஆறுகளிலும் யாரும் இறங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதுபற்றி மாவட்ட கலெக்டர் மீனா நாகராஜ் கூறுகையில், 'சிக்கமகளூரு மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அதனால் தேங்கி நிற்கும் நீரிலும், ஆறுகளிலும் யாரும் இறங்க வேண்டாம். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு உடனடியாக சென்றுவிடுங்கள் அல்லது அரசு முகாம்களுக்கு வந்துவிடுங்கள்' என்று கூறினார்.