பெங்களூருவில் கொட்டி தீர்த்த கனமழை

பெங்களூருவில் 2-வது நாளாக நேற்றும் கனமழை கொட்டி தீர்த்தது. சுரங்க சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

Update: 2023-05-30 21:08 GMT

பெங்களூரு:

10 நாட்களாக மழை

கர்நாடகத்தில் பெங்களூரு, மைசூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. கடந்த வாரம் பெங்களூருவில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

இதில் சுரங்க சாலையில் தேங்கிய மழைநீரில் கார் மூழ்கி இளம்பெண் ஒருவரும், வாலிபர் ஒருவர் ராஜகால்வாயில் சென்ற வெள்ளத்தில் விழுந்தும் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் கடந்த வாரம் கொட்டித்தீர்த்த கனமழையால் 10 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையே பெங்களூரு, குடகு, சாம்ராஜ்நகர், துமகூரு, மண்டியா, சிக்பள்ளாப்பூர், சிக்கமகளூரு, ராமநகர் உள்பட 9 மாவட்டங்களில் 4 நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

அதன்படி நேற்று முன்தினம் முதல் பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று பிற்பகலில் பெங்களூருவின் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை பெய்தது. விட்டுவிட்டு பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் ஓடியது. ராஜாஜிநகர், மல்லேசுவரம், ஜெயநகர், யஷ்வந்தபுரம் பகுதிகளில் கனமழை பெய்தது.

சுரங்க சாலைகளில்...

ஜே.சி.நகர், கமலாநகர், சாங்கி டாங்கி சாலை, பெங்களூரு வெளிவட்ட சாலை, வர்த்தூர், இப்லூர், பானசவாடி, எச்.ஏ.எல். விமான நிலையம், சிவாஜிநகர், அல்சூர், இந்திராநகர், எலகங்கா, சாம்ராஜ்பேட்டை பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை பெய்தது. பிற்பகலில் பெய்ய தொடங்கிய மழை, இரவு முழுவதும் இடைவிடாது கொட்டியது. இதனால் சுரங்க சாலைகளை மழைநீர் மூழ்கடித்தது.

மேலும் சாலைகளில் ஆறுபோல் மழை வெள்ளம் ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்னர். இதேபோல் பானசவாடி பகுதியில் சூறை காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மரக்கிளை ஒன்று முறிந்து சாலையில் விழுந்தது. அப்போது அந்த வழியாக வாகனங்கள் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதேபோல் விஜயநகர், எச்.ஏ.எல். விமான நிலைய சாலைகளில் சில மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் அந்த சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. இதையடுத்து அந்த சாலைகளில் போக்குவரத்து சீரானது.

போக்குவரத்து தடை

டர்ந்து பெய்த கனமழையால் ராஜாஜிநகர், வெஸ்ட் ஆப் கார்டு சாலையில் மழைநீர் ஆறுபோல் ஓடியது. மேலும் சாங்கி ரோட்டில் உள்ள சுரங்க சாலையில் வெள்ளநீர் தேங்கியது. அசம்பாவிதங்களை தடுப்பதற்காக சுரங்க சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

பெங்களூரு வெளிவட்ட சாலையில் மாரத்தஹள்ளி பகுதியில் சாலையில் சுமார் 2 அடிக்கு மழைநீர் தேங்கியது. அதில் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சிரமத்துடன் ஊர்ந்து சென்றன. மேலும் மகாலட்சுமி லே-அவுட் சர்ஜாப்புரா உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் வீடுகளுக்குள் மழைநீருடன், கழிவுநீரில் கலந்து சென்றதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்