பெங்களூருவில் கொட்டி தீர்க்கும் கனமழை

பெங்களூருவில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. ராஜாஜிநகரில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதுபோல சாலையில் பள்ளம் விழுந்ததால் பரபரப்பு உண்டானது.

Update: 2022-10-16 21:16 GMT

பெங்களூரு:

போக்குவரத்து நெரிசல்

கர்நாடகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. பெங்களூரு, சாம்ராஜ்நகர், மண்டியா உள்ளிட்ட தென்கர்நாடக மாவட்டங்களிலும், வடகர்நாடக பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் இரவு, பகல் பாராமல் மழை பெய்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் நேற்று காலை முதல் பெங்களூருவில் பரவலாக மழை பெய்து கொண்டே இருந்தது.

ராஜாஜிநகர், ஆர்.ஆர்.நகர், சிக்பேட்டை, கே.ஆர்.மார்க்கெட், கலாசிபாளையம், சிவாஜிநகர், விதான சவுதா, கப்பன் பார்க், இந்திராநகர், சாந்திநகர், ஹெப்பால், யஷ்வந்தபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் குளம் போல தேங்கி நின்றது. நேற்று வார இறுதி நாள் என்பதால் நகரில் போக்குவரத்து நெரிசல் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் வார இறுதி விடுமுறையன்று வெளியே செல்ல வேண்டும் என்று நினைத்து இருந்த ஐ.டி. ஊழியர்கள் கனவை மழை பாழாக்கியது.

வேரோடு சாய்ந்த மரம்

இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக மல்லேசுவரம் சாங்கி டாங்கி சாலையில் நேற்று பள்ளம் விழுந்தது. 4 அடிக்கு மேல் விழுந்த அந்த பள்ளத்தில் மக்கள் தவறி விழும் நிலையும் இருந்தது. இதுபற்றி அறிந்ததும் மாநகராட்சி ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று பள்ளம் விழுந்த இடத்தில் மண்ணை கொட்டி சரிசெய்தனர். மேலும் அந்த சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் இருவழி சாலை ஒருவழி சாலையாக மாற்றப்பட்டு இருந்தது.

இதுபோல பெங்களூருவின் பல பகுதிகளிலும் சாலையில் பள்ளங்கள் விழுந்து உள்ளது. சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் சாலை எது, பள்ளம் எது என்று தெரியாமல் வாகன ஓட்டிகள் விழிபிதுங்கி உள்ளனர். இந்த நிலையில் கனமழை காரணமாக நேற்று இரவு ராஜாஜிநகர் ராம்மந்திர் மைதானம் அருகே ஒரு ராட்சத மரம் வேரோடு விழுந்தது. அப்போது அந்த வழியாக யாரும் வரவில்லை. இதனால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

சுவர் இடிந்து விழுந்தது

மரம் விழுந்ததால் மின்வயர்களும் அறுந்து விழுந்தன. இதனால் அப்பகுதி இருளில் தத்தளித்தது. அந்த வழியாக வாகன போக்குவரத்துக்கு தடையும் விதிக்கப்பட்டது. இதற்கிடையே பெங்களுரு அரண்மனை ரோட்டில் உள்ள சி.ஐ.டி. அலுவலக சுற்றுச்சுவரும் கனமழைக்கு இடித்து விழுந்தது. அந்த சுவரை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த கனமழை பெங்களூரு நகர மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்