வலது சாரியாக இல்லாமல் எது சரியோ அதற்கு நிற்கிறீர்கள்: குஷ்புவை பாராட்டிய காங்கிரஸ் எம்பி சசி தரூர்
பில்கிஸ் பானு வழக்கில் நியாயத்தின் பக்கம் நின்றுள்ளதாக பாஜக செயற்குழு உறுப்பினர் குஷ்புவை காங்கிரஸ் எம்.பி சசி தரூர் பாராட்டியுள்ளார்.;
திருவனந்தபுரம்,
பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதற்கு குஷ்பு கண்டனம் தெரிவித்திருந்தார். குஷ்பு வெளியிட்ட டுவிட் பதிவில், "பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தாக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் உயிருக்கு பயந்த நிலையில் இருக்கும் பெண்ணுக்கு நீதி கிடைத்தாக வேண்டும். அப்படியான வெறிச்செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் விடுதலை செய்யப்பட கூடாது.
அப்படி விடுதலை செய்யப்பட்டால் அது மனித குலத்திற்கும், பெண்களுக்கும் இழைக்கப்படும் அவமானமாகும். பில்கிஸ் பானு மட்டுமல்ல, வேறு எந்த பெண்ணாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசியல் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்" என தெரிவித்து இருந்தார். குஷ்புவின் இந்த டுவிட்டை சுட்டிக் காட்டிய சசி தரூர் தனது டுவிட்டர் பக்கத்தில், " வலது சாரியாக இல்லாமல் எது சரியோ அதற்கு நிற்கிறீர்கள். பெருமையாக இருக்கிறது" என்று பதிலளித்துள்ளார்.
பில்கிஸ் பானு வழக்கின் வழக்கின் விவரம்;
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடைபெற்றது. நாட்டையே உலுக்கிய இந்த கலவரத்தின் போது பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி பெண், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பில்கிஸ் பானுவின் குழந்தை மற்றும் அவரது குடும்பத்தினர் என 7 பேர், அந்த கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர்.
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தொடர்புடைய 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 14 ஆண்டுகளுக்கும் மேல் தண்டனை பெற்று வந்த இவர்களை அண்மையில் அங்கு ஆளும் பாஜக அரசு விடுவித்தது. குஜராத் அரசின் தண்டனை குறைப்பு கொள்கையின் முன்கூட்டியே இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தேசத்தை உலுக்கிய முக்கியமான வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இதற்கு மத்தியில், குஜராத் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் மத்திய அரசும், குஜராத் அரசும் உரிய பதிலளிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.