இலவச தடுப்பூசி திட்டத்தில் இந்தியாவுக்கு 5 கோடி தடுப்பூசி கிடைக்குமா?
இலவச தடுப்பூசி திட்டத்தில் இந்தியாவுக்கு 5 கோடி தடுப்பூசி கிடைக்குமா என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,
உலகளவில் ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகள் வழங்குவதற்கு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் 'காவி' என்ற தடுப்பூசி கூட்டணி செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டணி கொரோனா வைரசுக்கு எதிராக கோவேக்ஸ் இலவச தடுப்பூசி திட்டத்தின்கீழ் இந்தியாவுக்கு 10 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் ஒதுக்கி உள்ளது.
இதில் 5 கோடி டோஸ் தடுப்பூசிகளை இந்தியாவுக்கு உடனே வினியோகிக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிற நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி திட்டம் நேற்று தொடங்கி உள்ள நிலையில், இந்த கோரிக்கை வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.