'ஹெல்மெட்' அணியாமல் வந்த இருசக்கர வாகனஓட்டிகளுக்கு 'ஹெல்மெட்' வழங்கிய போலீசார்

சிக்கமகளூரு அருகே ‘ஹெல்மெட்' அணியாமல் வந்த வாகனஓட்டிகளை, போலீசார் தடுத்து நிறுத்தி அபராத பணத்தில் ஹெல்மெட்டை வாங்க வைத்தனர். மேலும் அணிந்து வந்தவர்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து பாராட்டிய சம்பவம் நடந்துள்ளது.

Update: 2022-08-05 15:01 GMT

சிக்கமகளூரு;

அபராத பணத்தில் 'ஹெல்மெட்'

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகாவில் ஆல்தூர் உள்ளது. இங்கு சனிக்கிழமைதோறும் வாரச்சந்தை நடக்கும். மேலும் சிக்கமகளூருவில் இருந்து சிருங்கேரி சாரதம்மன் கோவில், ஒரநாடு அன்னபூர்ணேஸ்வரி கோவில்கள் மற்றும் சில முக்கிய சுற்றுலா தலங்களுக்கு ஆல்தூர் வழியாக தான் செல்ல வேண்டும்.

இதனால் ஆல்தூர் செல்லும் சாலையில் எப்போதும் வாகனம் நடமாட்டம் இருக்கும். வாகன நெரிசல் ஏற்பட்டு சில விபத்துகளும் நடக்கிறது. இந்த விபத்துகளை தடுக்க ஆல்தூர் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் ஆல்தூர் போலீசார், வாகனச்சோதனையில் ஈடுபட்டு இருச்சக்கர வாகனங்களில் 'ஹெல்மெட்' அணியாமல் வருபவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதிக்கின்றனர்.

பின்னர் அந்த பணத்தில் அருகே உள்ள கடைகளில் ஐ.எஸ்.ஐ. தரம் வாய்ந்த 'ஹெல்மெட்'டை வாங்க வைத்து அணிவிக்க வைக்கின்றனர். பின்னர் இனிமேல் 'ஹெல்மெட்' அணியாமல் வந்தால் கடும் நடவடிக்கை எடுப்பதாக எச்சரிக்கை விடுத்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி அனுப்பி வைக்கின்றனர்.

ரோஜாப்பூ கொடுத்து பாராட்டு

அதேபோல் 'ஹெல்மெட்' அணிந்து வருபவர்களையும் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து பாராட்டி அனுப்பி வைக்கின்றனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு வாகனஓட்டிகள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும் தகவல் அறிந்த சிக்கமகளூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்‌ஷய் மச்சீந்திரா, ஆல்தூர் போலீசாரை வெகுவாக பாராட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்