தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு காரில் கடத்திய ரூ.2 கோடி ஹவாலா பணம் சிக்கியது - 2 பேர் கைது

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு காரில் கடத்திய ரூ.2 கோடி ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-10-22 00:37 GMT

திருவனந்தபுரம்,

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு ஒரு காரில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக எர்ணாகுளம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விவேக்குமாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதைதொடர்ந்து தமிழ்நாட்டில் இருந்து வரும் வாகனங்களை கண்காணிக்க போலீசுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி பெரும்பாவூர் போலீசார் மற்றும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் அங்கமாலி பகுதியில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது.

இதையடுத்து போலீசார் தங்களது வாகனத்தில் பல கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று அந்த காரை மடக்கி பிடித்தனர். அதைதொடர்ந்து போலீசார் காரில் சோதனை நடத்தியபோது காருக்குள் ரகசிய அறை இருந்தது தெரிய வந்தது. அந்த அறையில் ரூ.2 கோடி பணம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அது ஹவாலா பணம் என்றும், கோவையில் இருந்து கோட்டயத்திற்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து காரில் இருந்த கோட்டயத்தை சேர்ந்த அமல் மோகன் மற்றும் அகில் சஜீல் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்