ஹாசன் தொகுதி டிக்கெட் விவகாரத்தில் கட்சி தொண்டருக்கு முன்னுரிமை; குமாரசாமி பேட்டி
ஹாசன் தொகுதி டிக்கெட் விவகாரத்தில் கட்சி தொண்டருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று குமாரசாமி கூறியுள்ளார்.
ஹாசன்:
ஹாசன் தொகுதி டிக்கெட் விவகாரத்தில் கட்சி தொண்டருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று குமாரசாமி கூறியுள்ளார்.
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ஹாசனில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
குறை சொல்லவில்லை
மண்டியாவில் பிரதமர் மோடி, ஜனதா தளம் (எஸ்) குறித்து விமர்சிக்கவில்லை. ஏனெனில் எங்கள் கட்சியை குறை கூறி பேச அவரிடம் எந்த விஷயமும் இல்லை. தேவேகவுடா பிரதமராக இருந்தபோதோ அல்லது நான் முதல்-மந்திரியாக இருந்தபோதோ ஊழலுக்கு இடம் அளிக்கவில்லை. அவற்றை ஊக்குவிக்கவும் இல்லை. அதனால் மோடிஎங்கள் கட்சியை குறை சொல்லவில்லை. நான் 2-வது முறையாக முதல்-மந்திரியாக இருந்தபோது மண்டியா மாவட்டத்தில் ஏராளமான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தினேன். பா.ஜனதா ஆட்சியில் அந்த மாவட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்தனர்?. மண்டியாவுக்கு ஒதுக்கிய நிதியை வேறு பகுதிகளுக்கு திருப்பி விட்டனர். இந்த உண்மையை அவர்களால் கூற முடியுமா?. அதனால் எங்கள் கட்சியை குறை கூறி பேச மோடியிடம் சரக்கு இருக்கவில்லை.
கவலைப்படுவது இல்லை
பிரதமர் மோடி மண்டியாவுக்கு வந்ததால் எங்களுக்கு பயம் ஏற்பட்டுவிட்டதாக சொல்கிறார்கள். எங்களுக்கு எந்த பயமும் இல்லை. அவர் எத்தனை முறை வேண்டுமானாலும் வந்து செல்லட்டும். அதை பற்றி நாங்கள் கவலைப்படுவது இல்லை. பிரதமர் மோடியின் பேச்சை கண்டு மக்கள் மயங்கும் நிலை தற்போது இல்லை. தேசிய கட்சிகளுக்கு எதிராக போராடும் பலம் எங்களுக்கு உள்ளது.
ஹாசன் தொகுதி டிக்கெட் விவகாரத்தில் கட்சி தொண்டர் ஒருவருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று நான் ஏற்கனவே கூறியுள்ளேன். அந்த விஷயத்தை தற்போதும் சொல்கிறேன். கட்சி தொண்டருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எனது பயண தேதிகளில் வருகிற 18-ந் தேதி காலியாக வைத்து கொண்டுள்ளேன். அதற்குள் இந்த விஷயத்தில் சுமுக முடிவு ஏற்பட்டால், அன்றைய தினம் ஹாசனில் கட்சி கூட்டம் நடைபெறும். என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
ஹாசன் தொகுதியில் எச்.டி.ரேவண்ணாவின் மனைவி பவானி டிக்கெட் கேட்கிறார். அவர் ஏற்கனவே தன்னைத்தானே வேட்பாளராக அறிவித்து கொண்டார். இதை குமாரசாமி நிராகரித்துவிட்டார். இந்த விஷயத்தில் தேவேகவுடா குடும்பத்தில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.