தீபாவளியை முன்னிட்டு ஹாசனாம்பா கோவில் நடை நாளை திறப்பு; முதல்நாளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆண்டுக்கு ஒருமுறை திறக்கப்படும் ஹாசனாம்பா கோவில் நடை நாளை(வியாழக்கிழமை) திறக்கப்படுகிறது.

Update: 2022-10-11 21:41 GMT

ஹாசன்:

ஹாசனாம்பா கோவில்

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா தேவி கோவில் உள்ளது. இந்த கோவில் ஆண்டுக்கு ஒருமுறை அதாவது தீபாவளி பண்டிகையையொட்டி 10 நாட்களுக்கு மேல் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். மேலும் கோவிலின் விசேஷம் என்னவென்றால் கடைசி நாளன்று கோவிலில் பூஜை செய்து தீபம் ஏற்றப்பட்டு, பிரசாதம் படைக்கப்படும். இதையடுத்து ஓராண்டு கழித்து நடை

திறக்கும்போது ஹாசனாம்பா தேவி அருளால் ஏற்றப்பட்ட தீபம் அணையாமலும், படைக்கப்பட்ட பிரசாதம் கெட்டுக்போகாமல் இருப்பதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த நாட்களில் ஹாசனாம்பா கோவிலுக்கு வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்தெல்லாம் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

நடை நாளை திறப்பு

இந்த நிலையில் இந்தாண்டு தீபாவளியையொட்டி வருகிற 13-ந்தேதி(நாளை) முதல் 27-ந்தேதி வரை ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்படுகிறது. முதல்நாளான நாளை கோவில் திறக்கப்பட்டு சுத்தப்படுத்தும் பணி நடக்கிறது. இதனால் முதல்நாளில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. ஹாசன் மாவட்ட பொறுப்பு மந்திரி கோபாலய்யா, மக்கள் பிரதிநிதிகள் மட்டும் கலந்து கொள்வார்கள். மேலும் 25-ந்தேதி சூரியகிரகணம், 27-ந்தேதி நடை சாத்தப்படும் நாள் ஆகிய 2 நாட்களுக்கும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இதற்கு இடைப்பட்ட நாட்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஹாசனாம்பா கோவில் நடை திறப்பதற்கான முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. அந்த வகையில் ஹாசன் மாவட்ட நிர்வாக கருவூலத்தில் இருந்த சாமி நகைகள் அனைத்தும் புஷ்ப பல்லக்கு மூலம் கோவிலுக்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இது தாசில்தார் நடேஷ் முன்னிலையில் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்