ஜெய்சங்கர் கருத்து எதிரொலி இந்திய-சீன எல்லை பிரச்சினை தீர்ந்து விட்டதா? காங்கிரஸ் கேள்வி

கடந்த நவம்பர் மாதம், பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின்பிங் இடையிலான சந்திப்பை வெறும் மரியாதை நிமித்தமானது என்று மோடி அரசு கூறியிருந்தது.

Update: 2023-07-28 18:12 GMT

புதுடெல்லி,

மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், கடந்த நவம்பர் மாதம், பாலியில் இந்திய-சீன தலைவர்கள் இடையே வெறும் வாழ்த்துகளுக்கு அப்பாலும் விஷயங்கள் நடந்ததாக கூறியிருந்தார்.

இந்நிலையில், இதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 19-ந் தேதி, சீனாவுக்கு பிரதமர் மோடி நற்சான்றிதழ் அளித்ததில் இருந்து, சீனா மீது கடுமையாக நடந்து கொள்வது போலவும், எதுவும் விட்டுக்கொடுக்கவில்லை என்பது போலவும் மோடி அரசு நடித்துக் கொண்டிருக்கிறது. அதே சமயத்தில், சீன படைகள் முந்தைய ஒப்பந்தங்களை மீறி வருகின்றன.

கடந்த நவம்பர் மாதம், பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின்பிங் இடையிலான சந்திப்பை வெறும் மரியாதை நிமித்தமானது என்று மோடி அரசு கூறியிருந்தது. ஆனால், அச்சந்திப்பில் முக்கியமான கருத்தொற்றுமை ஏற்பட்டதாக கடந்த 25-ந் தேதி சீன வெளியுறவு அமைச்சகம் கூறியது. உடனே, நமது வெளியுறவு மந்திரி, வாழ்த்துகளுக்கு அப்பாலும் நடந்ததாக கூறினார். இது கருத்தொற்றுமையா? அல்லது பிரதமர் மோடி ஏதேனும் சலுகை அளித்துள்ளாரா? இந்திய-சீன எல்லை பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு விட்டதா? சீனப்படைகள், டெப்சங், டெம்சோக் ஆகிய இடங்களில் இருந்து வாபஸ் பெறப்படுமா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்