அரியானா: வேலைக்கு சென்ற இடத்தில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்...!! தாய், 2 மகன்கள் மீது வழக்கு

சிறுமியின் தாயாரால் பல முறை முயன்றும் மகளை பார்க்கவோ, தொலைபேசியில் தொடர்பு கொள்ளவோ முடியவில்லை.

Update: 2023-12-10 14:10 GMT

குருகிராம்,

அரியானாவின் குர்காவன் நகரில் செக்டார் 57 பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 13 வயது சிறுமி வேலைக்காக சேர்ந்துள்ளார். ஆனால், வேலைக்கு சேர்ந்ததில் இருந்து, சரியாக சிறுமிக்கு உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

அந்த வீட்டின் பெண், சிறுமியை இரும்பு தடி மற்றும் சுத்தியலால் அடித்து, துன்புறுத்தி வந்துள்ளார். சசி என்ற அந்த பெண்ணின் 2 மகன்களும், சிறுமியின் ஆடைகளை களைந்து, நிர்வாண நிலையில் வீடியோ எடுத்தும், தகாத முறையில் தொட்டும் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர். நாயை விட்டு கடிக்கவும் செய்துள்ளனர்.

சிறுமியை அறை ஒன்றில் அடைத்து வைத்து, வாயை டேப் கொண்டு ஒட்டியுள்ளனர். இதனால், சிறுமியால் சத்தம் போட முடியவில்லை. உதவியும் கோர முடியவில்லை. சிறுமியின் கைகளில் ஆசிட் ஊற்றி, இதுபற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவோம் என சிறுமிக்கு வேலை கொடுத்த வீட்டினர் மிரட்டலும் விடுத்துள்ளனர்.

சிறுமியின் தாயார் மகளை காணாமல் தேடி நேராக அந்த வீட்டுக்கு சென்றுள்ளார். அவருடன் மற்றொரு நபரும் சென்று சிறுமியை கட்டவிழ்த்து, மீட்டு கொண்டு வந்துள்ளனர். 48 மணிநேரத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே சிறுமிக்கு உணவு கொடுத்துள்ளனர்.

சிறுமியின் தாயார் போலீசில் அளித்த புகாரின்படி, மாதம் ரூ.9 ஆயிரம் சம்பளம் என பேசி சிறுமியை கடந்த ஜூனில் வேலைக்கு விட்டுள்ளார். முதல் இரு மாதங்களுக்கு சம்பளம் பெற்றுள்ளார்.

அதன்பின் பணமும் கிடைக்கவில்லை. பல முறை முயன்றும் மகளையும் அவரால் பார்க்க முடியவில்லை. தொலைபேசியிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்த புகாரின் பேரில் அந்த வீட்டில் இருந்த சசி சர்மா, அவரின் 2 மகன்களுக்கு எதிராக பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்