ஆட்டோவில் தவறவிட்ட நகை உரிமையாளரிடம் ஒப்படைப்பு; டிரைவருக்கு போலீசார் பாராட்டு

சிவமொக்காவில் ஆட்டோவில் தவறவிட்ட நகை உரிமையாளரிடம் ஒப்படைத்த டிரைவருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Update: 2022-09-12 15:24 GMT

சிவமொக்கா;


சிவமொக்கா (மாவட்டம்) டவுன் திப்பு நகர் பகுதியில் ஒரு பெண் வசித்து வருகிறார். அவர் கடந்த 10-ந் தேதி அசோகா சதுக்கத்தில் இருந்து ஒரு ஆட்டோவில் பயணித்தார். ஆட்டோவை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த முகமது கவுஸ் ஓட்டினார். அந்த பெண் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றதும் ஆட்டோவில் இருந்து இறங்கி சென்றுவிட்டார்.

அப்போது அவர் தன்னுடைய கைப்பையை ஆட்டோவில் தவறவிட்டு சென்றுவிட்டார். அந்த கைப்பையை ஆட்டோ டிரைவர் முகமது கவுஸ் திறந்து பார்த்தார். அப்போது அந்த பையில் ரூ.2 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் இருந்தன. இதையடுத்து அந்த நகைப்பையை போக்குவரத்து போலீசாரிடம் முகமது கவுஸ் ஒப்படைத்தார்.

இதற்கிடையே நகைப்பையை தவறவிட்ட அந்த பெண்ணும், இதுபற்றி தொட்டபேட்டை போலீசில் புகார் செய்திருந்தார். இந்த நிலையில் இதுபற்றி விசாரணை நடத்திய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி பிரசாத், அந்த பெண்ணையும், ஆட்டோ டிரைவர் முகமது கவுசையும் நேரில் அழைத்து விசாரித்தார்.

அப்போது அந்த நகைப்பை அந்த பெண்ணுடையது தான் என்று அவர் உறுதி செய்தார். பின்னர் ஆட்டோ டிரைவரின் கையாலேயே, அந்த பெண்ணிடம் நகைப்பை ஒப்படைக்கப்பட்டது. ஆட்டோ டிரைவரின் நேர்மையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி பிரசாத் வெகுவாக பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்.மேலும் அவருக்கு போலீசார் பலர் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்