சிவசேனாவுக்கு முதல்-மந்திரி பதவியை பாஜக வழங்கியிருந்தால் காங்கிரஸ் கூட்டணி உருவாகி இருக்காது - உத்தவ் தாக்கரே

இப்போது செய்ததை நீங்கள் (பாஜக) அப்போதே மரியாதையாக செய்திருக்கலாம்.

Update: 2022-07-01 10:43 GMT

மும்பை,

மராட்டியத்தில் அரசியல் சூறாவளி சற்று தணிந்துள்ள நிலையில், புதிதாக பொறுப்பேற்ற சிவசேனா - பா.ஜனதா கூட்டணி அரசிற்கு, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சில கேள்விகளை முன் வைத்துள்ளார்.

மும்பை சிவசேனா பவனில் செய்தியாளர் சந்திப்பில் தாக்கரே பேசியதாவது,

"2019ல் சிவசேனாவுக்கு முதல் மந்திரி பதவி வழங்க பாஜக மறுத்த நிலையில் இப்போது மட்டும் ஏன் ஒப்புக்கொண்டது. அப்போது சிவசேனாவுக்கு முதல் மந்திரி பதவி வழங்குவதாகவும் சுழற்சி முறையில் பதவியை மாற்றிகொள்ளலாம் என தெரிவித்த பாஜக, கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை.

2019ல் சிவசேனா - பா.ஜனதா கூட்டணி அரசாங்கத்தில், 2.5 ஆண்டுகள் சிவசேனாவை சேர்ந்தவர் முதல் மந்திரியாக இருப்பதற்கு பாஜக ஒப்புக்கொண்டிருந்தால், நாங்கள் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க வேண்டிய நிலை உருவாகியிருக்காது.

அமித் ஷா விடம் இது குறித்து பேசியிருந்தேன். ஆனால் பலனில்லை.

இப்போது செய்ததை நீங்கள் (பாஜக) அப்போதே மரியாதையாக செய்திருக்கலாம். அதேபோல, இப்போதும் மும்பைக்கு துரோகம் செய்ய வேண்டாம் என்று பாஜகவிடம் கேட்டுக் கொள்கிறேன்.

சிவசேனாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மந்திரியாக, ஏக்நாத் ஷிண்டேவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் சிவசேனாவை சேராதவராகவே கருதப்பட வேண்டும்.

புதிய அரசின் நடவடிக்கையால் வருத்தமடைகிறேன்.மும்பையில் உள்ள கஞ்சூர்மார்க் பகுதியிலிருந்து, ஆரே காலனிக்கு மெட்ரோ கார் ஷெட்டை மாற்றுவதற்கான நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

இந்த விவகாரத்தில், நான் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் இருக்கிறேன். ஆரே காலனியை பாதுகாக்கப்பட்ட வனமாக அறிவித்துள்ளேன். அந்த காட்டில் வனவிலங்குகள் உள்ளன.

சிவசேனா கட்சியில் நடந்த கிளர்ச்சி ஜனநாயகத்தை கேலிக்கூத்து ஆக்குவதாகவும், மேலும் இந்த சம்பவங்கள் மக்களின் வாக்குகளை வீணடிப்பதாகவும் அமைந்துவிட்டது" என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்