குஜராத்தில் புதிய மந்திரிகளில் 16 பேர் கோடீசுவரர்கள்
குஜராத்தில் புதிய மந்திரிகளில் 16 பேர் கோடீசுவரர்கள் 4 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.;
ஆமதாபாத்,
குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து அங்கு பூபேந்திர படேல் நேற்று முன்தினம் மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.
அவருடன் 16 மந்திரிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களில் 8 பேர் கேபினட் அந்தஸ்து மந்திரிகள் ஆவார்கள். 2 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரிகள், 6 பேர் ராஜாங்க மந்திரிகள் ஆவார்கள்.
அங்கு புதிதாக பதவி ஏற்றுள்ள முதல்-மந்திரி பூபேந்திர படேல் மற்றும் 16 புதிய மந்திரிகள் பற்றி ஆராய்ந்து ஏ.டி.ஆர். என்று அழைக்கப்படுகிற ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் சுவாரசிய தகவல்களை வெளியிட்டுள்ளன. அது பற்றிய ஒரு அலசல் வருமாறு:-
4 மந்திரிகள் மீது கிரிமினல் வழக்குகள்
* புதிய மந்திரிகளில் 4 மந்திரிகள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மீன் வளத்துறை ராஜாங்க மந்திரி பர்சோத்தம் சோலங்கி மீது இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 420 மற்றும் 465-ன் கீழ் மோசடி வழக்கு உள்ளது.
* மந்திரிகள் ஹர்ஷ் சங்கவி, ருஷிகேஷ் படேல், ராகவ்ஜி படேல் ஆகியோர் மீது இந்திய தண்டனைச்சட்டம் பிரிவுகள் 188, 500-ன் கீழ் பொது ஒழுங்குக்கு கீழ்ப்படியாமை மற்றும் அவதூறு வழக்குகள் உள்ளன.
16 பேர் கோடீசுவரர்கள்
* புதிய மந்திரிசபையில் முதல்-மந்திரி பூபேந்திர படேல் உள்பட 16 பேர் கோடீசுவரர்கள் ஆவார்கள்.
* புதிய மந்திரிகளின் சராசரி சொத்து மதிப்பு ரூ.32.7 கோடி. (முந்தைய மந்திரிசபையில் மந்திரிகளின் சராகரி சொத்து மதிப்பு ரூ.3.95 கோடிதான்).
* பணக்கார மந்திரிகளில் முதல் இடம் பிடித்திருப்பவர் பல்வந்த்சிங் ராஜ்புத். இவரது சொத்து மதிப்பு ரூ.372.65 கோடி.
* மந்திரிகளில் மிகக்குறைந்த சொத்துகளை உடையவர் பாச்சுபாய் காபத் ஆவார். இவரது சொத்து மதிப்பு ரூ.92.85 லட்சம்தான்.
* 6 மந்திரிகள் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள். 8 மந்திரிகள் பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு படித்தவர்கள். 3 மந்திரிகள் பட்டயப்படிப்பு படித்தவர்கள். முதல்-மந்திரி பூபேந்திர படேலும் சிவில் என்ஜினீயரிங்கில் பட்டயப்படிப்பு படித்தவர்தான்.
இளைய மந்திரி
* 3 மந்திரிகள் 50 வயதுக்கு குறைவானவர்கள். ஹர்ஷ் சங்கவி (வயது 37) மிக இளைய மந்திரி ஆவார். கனுபாய் தேசாய்தான் மிக மூத்த மந்திரி. இவரது வயது 71.
இவ்வாறு அந்த தகவல்கள் கூறுகின்றன.