குஜராத் சட்டசபை தேர்தல்: வாக்காளர்கள் வீடுகளில் இருந்து கொண்டே வாக்களிக்கலாம்! தலைமை தேர்தல் ஆணையர் தகவல்
குஜராத் சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற உள்ளது.
காந்திநகர்,
குஜராத் சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற உள்ளது. வரவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த பணிகளுக்காக ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் உட்பட தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் குழுவினர் இரண்டு நாள் பயணமாக குஜராத் மாநிலத்திற்குச் சென்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறுகையில்,
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின் போது வாக்குச் சாவடிகளுக்கு செல்ல முடியாத வாக்காளர்களின் வீடுகளுக்கு தேர்தல் அதிகாரிகள் வருகை தருவார்கள். அவர்கள் வாக்காளர்களிடம் நேரடியாக வாக்குகளை சேகரிப்பார்கள்.
இந்த முழுமையான வாக்குப்பதிவு முறை, வீடியோ பதிவு செய்யப்படும். மேலும், அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் வாக்குப்பதிவின்போது அந்த வீட்டில் இருக்கலாம்.
இந்த வசதியைப் பெற விரும்புவோர், 12டி படிவம் ஒன்றை நிரப்ப வேண்டும். தபால் வாக்குச் சீட்டு வசதியைப் பெற பயன்படுத்தப்படும் அதே 12டி படிவம் தான் இந்த புதிய முறை வாக்கெடுப்பிற்கும் நிரப்பப்படுகிறது.
இம்முறை சட்டசபை தேர்தலில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மீது கவனம் செலுத்துகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும், வரவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான இறுதி வாக்காளர்பட்டியல் அக்டோபர் 10ம் தேதிக்குள் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், எந்தெந்த வாக்களர்கள் இந்த வசதியை பெற அனுமதிக்கப்படும்? எந்தெந்த நேரத்தில் தேர்தல் அலுவலகர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கு வருவார்கள் என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.