ராகுல் காந்தியின் மேல் முறையீடு மனு மே 2 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

ராகுல் காந்தியின் மேல் முறையீடு வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை நீதிபதி மே மாதம் 2-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.;

Update:2023-04-30 00:19 IST

அவதூறு வழக்கில் குற்றவாளி என்ற தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்த செசன்ஸ்கோர்ட்டு உத்தரவை எதிர்த்து ராகுல், குஜராத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அங்கு விசாரணை தொடங்கியது. மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி ஆஜராகி வாதாடினார்.

ராகுலுக்கு 2 ஆண்டு சிறை

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலம், கோலாரில் பிரசாரம் செய்தபோது, பிரதமர் மோடியை கடுமையாக சாடினார். குறிப்பாக, அவர், "நிரவ் மோடி, லலித்மோடி, நரேந்திர மோடி என திருடர்கள் அனைவரின் பெயருக்குப்பின்னே மோடி என இருப்பது எப்படி?" என்று கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து அவர் மீது குஜராத் முன்னாள் மந்திரியும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான புர்னேஷ் மோடி போட்ட வழக்கில், அவர் குற்றவாளி என சூரத் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு முடிவு செய்து, 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. கடந்த மாதம் 23-ந் தேதி வெளியான இந்தத் தீர்ப்பால், ராகுலின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

செசன்ஸ் கோர்ட்டு மறுப்பு

இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் சூரத் கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் கடந்த 3-ந் தேதி மேல்முறையீடு செய்தார். அங்கு அவரது மேல்முறையீட்டில் தீர்ப்பு வரும் வரையில் ஜாமீன் வழங்கியும், தண்டனையை நிறுத்தி வைத்தும் நீதிபதி ஆர்.பி.மோக்ரா உத்தரவிட்டார்.

அதே நேரத்தில், அவதூறு வழக்கில் அவர் குற்றவாளி என கூறிய விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்து, அந்த மனுவை கடந்த 20-ந் தேதி தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஐகோர்ட்டில் மேல்முறையீடு

இந்த உத்தரவுக்கு எதிராக குஜராத் ஐகோர்ட்டில் ராகுல் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீடு தொடர்பாக கடந்த 26-ந் தேதி, ஐகோர்ட்டில் நீதிபதி கீதா கோபி முன்னிலையில் ராகுல் வக்கீல் பி.எஸ்.சாம்பனேரி ஆஜராகி முறையிட்டார். அப்போது இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி கீதா கோபி அறிவித்தார். இதையடுத்து ராகுல் மேல்முறையீடு நீதிபதி ஹேமந்த் பிரச்சாரக்குக்கு மாற்றப்பட்டது.

விசாரணை தொடங்கியது

இந்த நிலையில், குஜராத் ஐகோர்ட்டில் நீதிபதி ஹேமந்த் பிரச்சாரக் முன்னிலையில் ராகுலின் மேல்முறையீடு விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் தரப்பில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மூத்த வக்கீலுமான அபிஷேக் சிங்வி ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த வழக்கில், தண்டனைக்கு வழிவகுத்த விசாரணையின் செயல்முறை கடும் அச்சத்தை எழுப்புகிறது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் விஷயத்தில், இது அவருக்கும், அவரது தொகுதிக்கும், மறுதேர்தலிலும் மிகவும் தீவிரமான மாற்ற முடியாத விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது. அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை. பல்வேறு தீர்ப்புகளின் கீழ் வரையறுக்கப்பட்ட ஒரு கடுமையான குற்றத்தை உள்ளடக்கியது இல்லை.

எதிர்மறை பலன்

ராகுல் குற்றவாளி என அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு தடை கோரிய மனு செசன்ஸ் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த உத்தரவு, கொலை, ஆள் கடத்தல் மற்றும் பலாத்காரம் போன்ற கடுமையான குற்றங்களுக்கான தீர்ப்புகளைச் சார்ந்திருந்தது என்பதால், அது ராகுலுக்கு எதிர்மறையான பலனைத் தரும்.

இத்தகைய குற்ற அவதூறு வழக்கில் தன் மீதான குற்றத்தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்ற ராகுல் மனுவை மறுப்பதன் மூலம், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 389-வது பிரிவின் நோக்கத்தை கோர்ட்டு மாற்றுகிறது.

வழக்கின் புகார்தாரர்

ராகுல் பேசிய பேச்சு கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்தது ஆகும். அது அங்கு. அடையாளம் காணக்கூடிய எந்த வகுப்பினரையும் தூண்டவில்லை, அந்த பேச்சில் குறிப்பிடப்பட்டுள்ள நீரவ் மோடி உள்ளிட்ட 3 பேரில் யாரும் இந்த வழக்கில் புகார்தாரர் இல்லை.

சுப்ரீம் கோர்ட்டு கண்டிப்பு

சூரத் கோர்ட்டு, தண்டனை அம்சம் பற்றிய விசாரணையை வெறும் 10 நிமிடம் மட்டும் நடத்தி விட்டு அதிகபட்ச தண்டனையை வழங்கி உள்ளது. ரபேல் போர் விமான பேரம் தொடர்பான கருத்துக்காக ராகுல் காந்தியை சுப்ரீம் கோர்ட்டு எச்சரித்ததின் அடிப்படையில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கோலாரில் அவர் பேசி 7 மாதங்களுக்குப் பிறகே சுப்ரீம் கோர்ட்டின் அந்தக் கண்டிப்பு வந்தது.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

ஒத்திவைப்பு

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை நீதிபதி மே மாதம் 2-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்