குஜராத்: ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்; அமித்ஷா பாராட்டு
போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் ஈரான் அல்லது பாகிஸ்தான் நாட்டினராக இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.;
புதுடெல்லி,
குஜராத் கடலோர பகுதியில் போதை பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரிகள் மற்றும் குஜராத் பயங்கரவாத ஒழிப்பு படையினர், இந்திய கடற்படையுடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில், அரபி கடலில் சர்வதேச கடல் எல்லை கோட்டு பகுதியில் நடந்த போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கையில், கஞ்சா, மெத்தம்பிடமைன் மற்றும் மார்பைன் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த எடை 3,300 கிலோ இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் ஈரான் அல்லது பாகிஸ்தான் நாட்டினராக இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும், அதுபற்றிய ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இதுபற்றி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டு உள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவில், பிரதமர் மோடியின் போதை பொருள் இல்லாத பாரதம் என்ற தொலைநோக்கு பார்வையின் தொடர்ச்சியாக, பெரிய அளவில் கடற்பகுதியில் போதை பொருள் பறிமுதல் நடவடிக்கை வெற்றியடைந்து உள்ளது.
போதை பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரிகள், இந்திய கடற்படை மற்றும் குஜராத் பயங்கரவாத ஒழிப்பு படையினர் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் 3,132 கிலோ போதை பொருளை கைப்பற்றி உள்ளனர்.
இந்த வரலாற்று வெற்றியானது, போதை பொருள் இல்லாத பாரதம் என்ற நம்முடைய அரசின் ஈடு இணையற்ற செயல்பாட்டுக்கு சான்றாக அமைந்துள்ளது. இந்த தருணத்தில், போதை பொருள் கட்டுப்பாட்டு வாரியம், இந்திய கடற்படை மற்றும் குஜராத் பயங்கரவாத ஒழிப்பு படையினருக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் என அமித்ஷா தெரிவித்து உள்ளார்.