குஜராத்: வேதியியல் நிபுணரின் வீட்டில் சிக்கிய ரூ.121 கோடி போதைப்பொருள்..!!
குஜராத்தில் வேதியியல் நிபுணரின் வீட்டில் ரூ.121 கோடி போதைப்பொருள் சிக்கியது.;
ஆமதாபாத்,
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தின் சிந்துராட் கிராமத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலை ஒன்றில், போதைப்பொருள் தயாரிக்கப்படுவதாக வந்த தகவலின் பேரில் கடந்த மாதம் 29ந் தேதி பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த தொழிற்சாலையில் ரூ.478 கோடி மதிப்பிலான 'மெப்ட்ரோன்' எனப்படும் போதைப்பொருள் மற்றும் அதை தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் சிக்கின.
இது தொடர்பாக வேதியியல் நிபுணர் ஷைலேஷ் கட்டாரியா என்பவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் நேற்று முன்தினம் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் வதோதராவில் உள்ள ஷைலேஷ் கட்டாரியாவின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து ரூ.121 கோடி மதிப்புள்ள 24.28 கிலோ 'மெப்ட்ரோன்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.