சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து

அனைத்து துறைகளிலும் பெண்கள் புதிய சாதனைகளை படைத்து வருவதாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-07 15:06 GMT

Image Courtesy : ANI

புதுடெல்லி,

பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் ரீதியான சாதனைகளை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந்தேதி 'சர்வதேச மகளிர் தினம்' கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நாளைய தினம் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது;-

"சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, எனது சக குடிமக்கள் அனைவருக்கும், குறிப்பாக பெண்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதில் பெண்களின் சாதனைகள் மற்றும் அவர்களின் முயற்சிகளை அங்கீகரிக்க இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு சமமான வாய்ப்புகளை வழங்குவதன் அவசியத்தை வலியுறுத்துவதற்கும், வாழ்வின் அனைத்து துறைகளிலும் அவர்களை வலுப்படுத்துவதற்கும் இது ஒரு முக்கியமான சந்தர்ப்பமாகும். இன்றும், பெண்கள் பல சவால்களை எதிர்கொள்கின்றனர், அதை நாம் தீர்க்க வேண்டும்.

அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், விண்வெளி, ஆயுதப்படை மற்றும் விளையாட்டு என அனைத்து துறைகளிலும் பெண்கள் புதிய சாதனைகளை படைத்து வருகின்றனர். பெண்களின் சக்தி மற்றும் தலைமைத்துவத்தின் அடையாளமாக இந்த ஆண்டு நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பை நாம் கண்டோம்.

மகளிர் தின கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெறவும், அனைத்து பெண்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்