கர்நாடகத்தில் கல்வி, சுகாதார வசதிகளை மேம்படுத்த அதிக கவனம்-சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேச்சு
கர்நாடகத்தில் கல்வி, சுகாதாரம், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படுவதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.
பெங்களூரு: கர்நாடகத்தில் கல்வி, சுகாதாரம், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படுவதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.
மக்களுக்கு தெளிவு
மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர் அமைச்சகம் சார்பில் நல்லாட்சி நிர்வாகத்திற்காக பொதுமக்கள், தொழில்முனைவோர் மற்றும் அரசை ஒன்றாக ஏற்படுத்துவது குறித்த மாநாடு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திரசிங் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார். இதில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கலந்து கொண்டு பேசியதாவது:-
ராஜதர்மம், ராம ராஜ்ஜியம் மற்றும் நலப்பணிகள் நாடு என்ற விஷயங்களில் மக்களுக்கு தெளிவு உள்ளது. சாணக்கிய கொள்கைகள், ராமாயணம், மகாபாரதத்தை இந்தியர்கள் படித்து வந்துள்ளனர். புத்த மதத்தில் கூட நல்லாட்சி என்றால் என்ன, அதை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. 12-வது நூற்றாண்டில் பசவண்ணர் சமுதாய மாற்றத்திற்காக அனுபவ மண்டபத்தை கட்டினார். அதன் மூலம் அவர் ஜனநாயகத்திற்கு அடித்தளம் அமைத்தார்.
மக்களின் விருப்பங்கள்
பசவண்ணர், செய்யும் தொழிலே தெய்வம் என்று கூறினார். நல்லாட்சி என்றால், சாமானிய மக்களின் தேவை என்ன, அவர்களின் பிரச்சினைகள் என்ன என்பதை புரிந்து அவற்றுக்கு தீர்வு காண்பது தான். கர்நாடகத்தில் மக்களின் விருப்பங்களுக்கு ஏற்றபடி ஆட்சி நிர்வாகம் நடத்தப்படுகிறது. தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் 10 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.
கர்நாடகத்தில் கல்வி, சுகாதாரம், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. கொரோனா தடுப்பூசி 90 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளில் இது மிக குறைவாக உள்ளது. நாட்டில் இதுவரை 200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது. பெங்களூருவில் மட்டும் 13 ஆயிரம் நிறுவனங்கள் செயலாற்றி வருகின்றன. அதனால் இங்கு வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஆராய்ச்சி முதல் அனைத்து துறைகளிலும் மனித வளம் சரியான முறையில் பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு சுதாகர் கூறினார்.