கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் வெடிவைத்து ஆவணங்கள் எரிப்பு; முறைகேட்டை மறைக்க மர்மநபர்கள் சதியா?

துமகூரு அருகே கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் வெடிவைத்து ஆவணங்கள் எரிக்கப்பட்டுள்ளன. முறைகேட்டை மறைக்க மர்மநபர்கள் இந்த சதியில் ஈடுபட்டனரா என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Update: 2022-09-16 21:49 GMT

பெங்களூரு:

கிராம பஞ்சாயத்து அலுவலகம்

துமகூரு மாவட்டம் பாவகடா தாலுகா ஒய்.என்.ஒசக்கோட்டை அருகே பூதிபெட்டா கிராமம் உள்ளது. அந்த கிராமத்திலேயே பூதிபெட்டா கிராம பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் ஊழியர்கள் பஞ்சாயத்து அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றிருந்தனர்.

இந்த நிலையில், நள்ளிரவில் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் மா்ம பொருள் வெடித்து சிதறும் சத்தம் கேட்டது. உடனே கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து பஞ்சாயத்து அலுவலகத்திற்கு ஓடிவந்தனர். தகவல் அறிந்ததும் பாவகடா போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் வெடி விபத்து நடந்திருப்பது தெரியவந்தது.

ஆவணங்கள் எரிந்தன

அதாவது பஞ்சாயத்து அலுவலகத்தின் பின்பக்க ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், ஆவணங்கள் வைக்கப்பட்டு இருந்த பீரோக்களுக்கு முன்பாக இருந்த நாற்காலியில் ஜெலட்டின் குச்சிகளை வைத்து, இந்த வெடி விபத்து சம்பவத்தை அரங்கேற்றி இருந்தது தெரிந்தது. இதில் சில ஆவணங்களும் எரிந்துபோனது. அத்துடன் கட்டிட சுவரிலும் விரிசல்கள் ஏற்பட்டன.

அந்த பஞ்சாயத்தில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக முறைகேடுகள் தொடர்பான ஆவணங்களை நாசப்படுத்தும் நோக்கத்தில் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஜெலட்டின் குச்சிகள் மூலமாக வெடி விபத்தை ஏற்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.

பரபரப்பு

இதுகுறித்து பாவகடா போலீசார் வழக்குப்பதிவு செய்து மா்மநபா்களை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்