பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 28 சிக்னல்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தி கண்காணிப்பு
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூடிய விரைவில் 28 சிக்னல்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தி கண்காணிக்கப்பட உள்ளது. ஜப்பான் தொழில்நுட்ப உதவியுடன் அமைக்கப்படுகிறது.
பெங்களூரு:
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூடிய விரைவில் 28 சிக்னல்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தி கண்காணிக்கப்பட உள்ளது. ஜப்பான் தொழில்நுட்ப உதவியுடன் அமைக்கப்படுகிறது.
ஜி.பி.எஸ். மூலம் கண்காணிப்பு
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை சரி செய்ய அரசும், போக்குவரத்து போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். ஆனால் போக்குவரத்து நெரிசல் மட்டும் குறைந்தபாடில்லை. இந்த நிலையில், பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை தடுக்கவும், அதனை கண்காணிக்கவும் தகவல் தொழில்நுட்ப முறைக்கு சென்றுள்ளனர்.
அதன்படி, பெங்களூருவில் 28 போக்குவரத்து சிக்னல்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தி கண்காணிக்கும் திட்டத்தை தொடங்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அந்த சிக்னல்களில் நெரிசல் ஏற்பட்டால், ஜி.பி.எஸ். மூலமாக சிக்னல்களை இயக்கப்படும். இதற்காக சிக்னல்களில் ஜி.பி.எஸ். கருவியுடன், இணையதள வசதியும் கொடுக்கப்படும். எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் இதற்காக தனியாக மையமும் அமைக்கப்படுகிறது.
ஜப்பான் தொழில்நுட்பம்
அந்த மையத்தில் இருந்து 28 சிக்னல்களில் இருக்கும் ஜி.பி.எஸ். மூலம் கண்காணித்து, அங்கு நெரிசல் உண்டானால், வாகனங்கள் தொடர்ந்து செல்வதற்காக பச்சை விளக்கு எரிந்தபடி இருக்கும். அறிவிப்பு பலகை (டிஜிட்டல் போர்டு) மூலமாகவும் போக்குவரத்து நெரிசல் பற்றி வாகன ஓட்டிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும். போக்குவரத்து போலீசாரும் அந்தந்த சிக்னல்களுக்கு சென்று நெரிசலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள்.
முதற்கட்டமாக பெங்களூருவில் 28 சிக்னல்களில் இந்த தொழில்நுட்ப முறை அமைக்கப்பட இருக்கிறது. ஜப்பான் நாட்டு தொழில்நுட்ப உதவியுடன் சிக்னல்களில் போக்குவரத்து நெரிசலை தொடர்ந்து கண்காணிப்பதுடன், நெரிசலை சரி செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாக போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் கூடிய விரைவில் பெங்களூருவில் அமலுக்கு வர உள்ளது.