அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த 'பாரத் அரிசி' : விற்பனை தொடங்கியது மத்திய அரசு
பாரத் அரிசி விற்பனைக்காக பயன்படுத்தப்படும் 100 வாகனங்களை மத்திய மந்திரி பியூஷ் கோயல் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் அரிசி விலை உயர்ந்து வருகிறது. கடந்த ஓராண்டில் 15 சதவீதம் அதிகரித்து விட்டது. எனவே, அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்காக, மலிவு விலையில் அரிசி விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதற்கு 'பாரத் அரிசி' என்று பெயரிடப்பட்டது.
'பாரத் அரிசி' அறிமுக விழா நேற்று டெல்லியில் நடந்தது. மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை மந்திரி பியூஷ் கோயல் அறிமுகப்படுத்தினார்.
பாரத் அரிசி விற்பனைக்காக பயன்படுத்தப்படும் 100 வாகனங்களை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 5 கிலோ மற்றும் 10 கிலோ பாக்கெட்டுகளில் பாரத் அரிசி கிடைக்கும். கிலோ ரூ.29 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மத்திய மந்திரி பியூஷ் கோயல், 5 பயனாளிகளுக்கு தலா 5 கிலோ அரிசி பாக்கெட்டுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், "மொத்த விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பெரும்பாலான மக்களுக்கு பலன் அளிக்கவில்லை. எனவே, சில்லரை சந்தையில் தலையிட்டுள்ளோம்.
இந்த அரிசி, நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு பலன் அளிக்கும். ஏற்கனவே 'பாரத் ஆட்டா' என்ற பெயரில் கோதுமை விற்பனையை தொடங்கிய பிறகு கோதுமை விலை குறைந்து விட்டது. அதுபோல், பாரத் அரிசியும் அரிசி விலை குறைவுக்கு வழி வகுக்கும்.
நான் ஏற்கனவே 'பாரத் ஆட்டா', 'பாரத் பருப்பு' பயன்படுத்தி இருக்கிறேன். நல்ல சுவையாக இருந்தது. இனிமேல், பாரத் அரிசியையும் பயன்படுத்துவேன்" என்று அவர் பேசினார்.