சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் மேம்படுத்த அரசு பாடுபடுகிறது - பிரதமர் மோடி
வறுமை மற்றும் புறக்கணிப்பை எதிர்கொள்ளும் சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் மேம்படுத்த தனது அரசு உழைத்து வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ராஜஸ்தானில் பிரதமர் மோடி
ராஜஸ்தானில் குர்ஜார் சமூகத்தினர் வணங்கும் பகவான் தேவ்நாராயணனின் 1111-வது அவதார தினம் நேற்று கொண்டாடப்பட்டது. பகவான் விஷ்ணுவின் அவதாரமாக நம்பப்படும் ேதவ்நாராயணனின் பிறந்த இடம் பில்வாரா மாவட்டத்தின் மலாசேரி ஆகும். இதையொட்டி அங்குள்ள கோவிலில் நேற்று நடந்த சிறப்பு வழிபாடுகளில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். பின்னர் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியா தனது வலிமையையும், பலத்தையும் வெளிப்படுத்தி வருகிறது. இதனால் உலகம் இன்று இந்தியாவை அதிக நம்பிக்கையுடன் பார்த்து வருகிறது. இந்தியா இன்று உலகளாவிய தளங்களில் தன்னை உறுதிப்படுத்தி வருகிறது. அத்துடன் பிற நாடுகளைச் சார்ந்திருப்பதையும் குறைத்து வருகிறது.
விடுதலை போராட்டத்தில் பங்களிப்பு
இந்திய விடுதலை போராட்டம் மற்றும் பிற இயக்கங்களில் குர்ஜார் இன மக்கள் கணிசமான பங்களிப்பை வழங்கி உள்ளனர். ஆனால் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் வரலாற்றில் இடம்பெறாதது துரதிர்ஷ்டமானது. ஆனால் கடந்த காலங்களில் நடந்த இந்த தவறுகளை புதிய இந்தியா சரிசெய்து வருகிறது.இந்தியாவின் சித்தாந்தத்தை உடைப்பதற்கு பலமுறை முயற்சிகள் நடந்தது. ஆனால் எந்த சக்தியும் அதில் வெற்றி பெறவில்லை. இந்தியா என்பது ஒரு நிலப்பரப்பு மட்டுமல்ல. மாறாக நாகரிகம், கலாசாரம், நல்லிணக்கம் மற்றும் ஆற்றலின் வெளிப்பாடு. தேச ஒற்றுமைக்கு எதிரான எந்த ஒரு விஷயத்திலிருந்தும் மக்கள் விலகி இருக்க வேண்டும்.
பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை
புறக்கணிக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் அதிகாரம் அளித்து, அவர்களை மேம்படுத்த கடந்த எட்டு ஒன்பது ஆண்டுகளாக அரசு உழைத்து வருகிறது. பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை என்ற தாரக மந்திரத்துடன் நாங்கள் நகர்ந்து வருகிறோம்.
இந்தியாவின் பல்லாயிரம் ஆண்டு பயணத்தில் சமூக அதிகாரம் பெரும் பங்காற்றியுள்ளது. நமது பாரம்பரியத்தில் பெருமிதம் கொள்வோம். அடிமை மனப்பான்மையிலிருந்து விடுபட்டு நாட்டுக்கான நமது கடமைகளை நினைவில் கொள்வோம்.
கடந்த காலத்தில் ஏழைகள் ரேஷன் பொருட்களைப் பற்றிக் கவலைப்பட்டு வந்தார்கள். ஆனால் இன்று அவர்களுக்கு முழுமையாக மற்றும் இலவசமாக ரேஷன் கிடைக்கிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டம், மருத்துவ சிகிச்சை குறித்த கவலைகளை நீக்கியுள்ளது.
ஆழமான உறவு
முன்பு வங்கி பரிமாற்ற வசதிகள் குறிப்பிட்ட மக்களுக்கே கிடைத்து வந்தன. ஆனால் இன்று அனைவருக்கும் வங்கி கதவுகள் திறந்துள்ளன. 11 கோடிக்கும் அதிமான குடும்பங்களுக்கு குழாய் வழியாக குடிநீர் சென்றடைகிறது. பி.எம். கிசான் திட்டம் மூலம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
பகவான் தேவநாராயணன் எப்போதும் சமூக சேவைக்கும், பொது நலனுக்கும் முன்னுரிமை அளித்து, மக்கள் நலனுக்காக தனது முழு ஆற்றலையும் வழங்கினார். அவரது பக்தராக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன். எனவே உங்களுடனான எனது உறவு ஆழமானது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தான் மாநில பா.ஜனதா தலைவர் சதிஷ் பூனியா, மத்திய மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.