ரூ.800 கோடி செலவில் மின்சார வாகனங்களுக்கான 7432 'சார்ஜிங்' நிலையங்கள்
ரூ.800 கோடி செலவில் மின்சார வாகனங்களுக்கான 7432 ‘சார்ஜிங்’ நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
கார்பன் கழிவுகள் இல்லா சுற்றுச்சூழலை உருவாக்க மின்சார வாகனங்களை பயன்படுத்துவது அவசியம் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. மின்சார வாகனப்பயன்பாட்டை ஊக்குவிக்க அதற்கு மானியங்களும் வழங்கப்படுகின்றன. இதன்காரணமாக நாட்டில் மின்சார வாகனங்கள் பெருகி உள்ளது. பெருகிவரும் வாகனங்கள் தடையில்லா போக்குவரத்தை நடத்த அதற்கு சார்ஜிங் நிலையங்கள் அவசியம். இதைக்கருத்தில் கொண்டு பல இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தற்போது நாடு முழுவதும் 6586 சார்ஜிங் நிலையங்கள் உள்ளன.
இந்தநிலையில் ரூ.800 கோடி செலவில் மேலும் 7432 சார்ஜிங் நிலையங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதித்து உள்ளதாக மத்திய கனரக தொழில்துறை மந்திரி மகேந்திரநாத் பாண்டே தெரிவித்து உள்ளார். மின்சார வாகனங்களின் உற்பத்தியையும், பயன்பாட்டையும் ஊக்குவிக்கும் 'பேம் இந்தியா'வின் 2-ம் கட்டத்திட்டத்தின் கீழ் இந்த நிதி அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதில் ரூ.560 கோடி முதல்கட்டமாக விடுவிக்கப்பட்டு உள்ளது.
இந்தப்பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவுபெறும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் இருந்து மினிபஸ்கள் வரையிலான மின்சார வாகனங்கள் இதில் சார்ஜ் செய்து கொள்ளலாம்.