மானிய விலை யூரியாவை தவறாக பயன்படுத்தினால் சிறை தண்டனை - மத்திய அரசு அதிரடி

விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானிய விலை யூரியாவை தொழிற்சாலை பயன்பாட்டுக்கு பயன்படுத்தினால் சிறை தண்டனை உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது.;

Update: 2023-08-24 22:50 GMT

புதுடெல்லி,

மத்திய அரசு, வேம்பு கலந்த யூரியாவை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கி வருகிறது. 45 கிலோ கொண்ட மூட்டை, ரூ.266-க்கு விற்கப்படுகிறது. இதனால், மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் மானிய சுமை ஏற்படுகிறது.

அதே சமயத்தில், சில பொருட்களை தயாரிக்க யூரியா மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அதற்கு தொழிற்சாலை பயன்பாட்டுக்கான யூரியாவை பயன்படுத்த வேண்டும். அதன் விலை அதிகம்.

ஓராண்டுக்கு தொழிற்சாலை பயன்பாட்டுக்கான யூரியா 13 லட்சம் டன் முதல் 14 லட்சம் டன் வரை தேவைப்படுகிறது. ஆனால், 1 லட்சத்து 50 ஆயிரம் டன் யூரியா மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

தவறான பயன்பாடு

எனவே, விவசாயிகளுக்காக மானிய விலையில் வழங்கப்படும் யூரியாவை தொழிற்சாலைகள் முறைகேடாக வாங்கி பயன்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. சில ரசாயனங்கள் மூலம் யூரியாவில் உள்ள வேம்பை நீக்கிவிட்டு, அதை பயன்படுத்துவதாக தெரிகிறது.

பிசின், பசை, பிளைவுட், பீங்கான் பாத்திரங்கள், கால்நடை தீவனம், சுரங்க வெடிகள் ஆகியவற்றை தயாரிக்க இந்த யூரியா பயன்படுத்தப்படுகிறது. இதனால் மத்திய அரசின் மானியம் வீணாகிறது. விவசாயிகள் நலன்கள் பாதிக்கப்படுகின்றன.

கடந்த ஆண்டு மட்டும், சுமார் 10 லட்சம் டன் யூரியா தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் ரூ.6 ஆயிரம் கோடி மானியம் வீணானது.

விரிவான செயல் திட்டம்

ஆகவே, இந்த தவறான பயன்பாட்டை ஒடுக்க மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம், விரிவான செயல் திட்டத்தை வகுத்துள்ளது. அதன்படி, இதர அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன், விவசாயிகளுக்கான யூரியாவை பயன்படுத்தும் தொழிற்சாலைகளில் கூட்டாக அதிரடி சோதனை நடத்த உள்ளது. சரக்கு-சேவை வரி இயக்குனரகத்தின் உதவியையும் கோர உள்ளது.

விதிமீறலில் ஈடுபடும் தொழிற்சாலைகளின் உரிமையாளர்களுக்கு எதிராக அத்தியாவசிய பொருட்கள் சட்டம், கள்ளச்சந்தை தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. சிறை தண்டனை விதிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், தொழிற்சாலை பயன்பாட்டுக்கான யூரியாவின் மொத்த சப்ளையையும், யூரியா கொண்டு தயாரிக்கப்படும் மொத்த பொருட்களின் அளவையும் மத்திய அரசு சரிபார்க்கும். இதன்மூலம், யூரியாவின் தவறான பயன்பாட்டை தடுக்க முடியும் என்று கருதுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்