செயற்கைகோள் மூலம் இனி சுங்க கட்டணம் வசூல்... வெளியானது புதிய அறிவிப்பு

வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பது தொடர்பான புதிய முறையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

Update: 2024-09-12 00:27 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் முறையில் பெரிய மாற்றத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி குறிப்பிட்ட நெடுஞ்சாலையில் நீங்கள் பயணிக்கும் தூரம் வரையிலான கட்டணத்தை மட்டுமே செலுத்தினால் போதும், தற்போதுள்ள நடைமுறைப்படி முழுமையான சாலைக்கான கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை..

தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் ரொக்கம், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அதனால் சுங்கச்சாவடிகளில் நேர விரயம் ஏற்பட்டு வாகனங்கள் காத்திருக்கும் நிலை உருவானது. அதை போக்க 'பாஸ்டேக்' முறை அமலுக்கு வந்தது. அதன்பிறகும் விடுமுறை காலங்களில் ஒரே நேரத்தில் வெளியூர் செல்பவர்களால் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் தேங்கி வருகின்றன.

எனவே, 'பாஸ்டேக்' முறையுடன், செயற்கைக்கோள் அடிப்படையிலான 'குளோபல் நேவிகேஷன் சாட்டலைட் சிஸ்டம்' (ஜி.என்.எஸ்.எஸ்.) என்ற பயண தூர அடிப்படையில் சுங்க கட்டணம் வசூலிக்கும் முறை, குறிப்பிட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் அமல்படுத்தப்படும் என்று கடந்த ஜூலை மாதம் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தது.

பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலை பிரிவிலும், அரியானா மாநிலத்தில் பானிபட்-ஹிசார் பிரிவிலும் சோதனை முறையில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த புதிய முறை, நாடு முழுவதும் சில நெடுஞ்சாலைகளிலும், விரைவுச்சாலைகளிலும் நேற்று முன்தினம் அமலுக்கு வந்துள்ளது. இதற்காக 2008-ம் ஆண்டின் தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வாகனங்களில், செயற்கைக்கோள் இணைப்புக்கான ஆன்-போர்டு யூனிட் எனப்படும் சிறிய ஓ.பி.யு. கருவி வெளிப்புறத்தில் பொருத்தப்படும்.

இந்த கருவி பொருத்தப்பட்ட வாகனம், சுங்க கட்டணம் வசூலிக்கும் சாலைகளில் பயணிக்கும்போது, நாள் ஒன்றுக்கு, முதல் 20 கி.மீ.க்கு கட்டணம் கிடையாது. அதன்பிறகு பயணிக்கும் தூரம், செயற்கைக்கோள் வழியாக கணக்கிடப்பட்டு, 'பாஸ்டேக்' போலவே வங்கிக்கணக்கில் இருந்து சுங்க கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.

ஓ.பி.யு. கருவி வாயிலாக ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தில் செயற்கைக்கோளுடன் இணைப்பு ஏற்பட்டு வாகன பயண தூரம் பின்தொடரப்படும். குறிப்பிட்ட தொலைவுகளில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமராவின் பதிவுகளும் செயற்கைக்கோளுடன் ஒருங்கிணைக்கப்படும். ஓ.பி.யு. சாதனம் நாளடைவில் அனைத்து வாகனங்களிலும் பொருத்தப்படும்போது சுங்கச்சாவடிகள் தேவையற்றதாகி விடும். அப்போது வாகனங்கள் இடையூறின்றி பயணிக்க முடியும். சுங்கச்சாவடி அமைந்துள்ள பகுதிகளில், தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டி வசிக்கும் மக்கள் தினமும் 20 கி.மீ.வரை கட்டணமின்றி சென்றுவர வாய்ப்பு ஏற்படும்.

ஆன்-போர்டு யூனிட் (ஓ.பி.யு.) என்ற சிறிய கருவியை, பாஸ்டேக் போலவே, அரசு இணையதளங்களில் வாங்கலாம். புதிதாக விற்பனைக்கு வரக்கூடிய வாகனங்களில் தயாரிப்பு நிறுவனங்களே இதனை பொருத்தி விற்பனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்