தொழிலாளர்கள் நல வாரிய கஜானாவை அரசு காலி செய்கிறது
தொழிலாளர்கள் நல வாரிய கஜனாவை அரசு காலி செய்கிறது என்று ஏ.ஐ.டி.யூ.சி.மாநில தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.
குடகு:
குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா சித்தாபுராவில் உள்ள அரசு பவனில் மாவட்ட காபிநாடு கட்ட தொழிலாளர்கள் சங்க 2-வது ஆண்டு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. மாநில தலைவர் அம்ஜத் கலந்து கொண்டு கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தொழிலாளர்கள் நல வாரிய கஜானாவை காலி செய்ய மத்திய, மாநில அரசுகள் முயற்சித்து வருகின்றன. கடந்த பல வருடங்களாக தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை. அரசு பஸ்களில் கட்டிட தொழிலாளர்கள் இலவசமாக பயணிக்க பஸ் பாஸ் வழங்குவதாக கூறி, தொழிலாளர்கள் நல வாரிய கஜானாவில் இருந்து ரூ.48 லட்சத்தை அரசு செலவு செய்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது. கொரோனா காலத்தில் கட்டிட தொழிலாளர்களுக்காக அரசு அறிவித்த நிதி உதவி கூட முறையாக அவர்களுக்கு வந்து சேரவில்லை. விலைவாசி உயர்வால் தொழிலாளர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் மீண்டும் சவுகரியமாக வாழ அரசு வழிவகை செய்ய வேண்டியது அவசியம். கட்டிட தொழிலாளர்கள் கடந்த பல வருடங்களாக போராட்டம் நடத்தி வந்தாலும், அரசு இதுவரையில் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.