ஆன்லைன் உணவு வினியோக நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
நுகர்வோர் குறைதீர்ப்பு முறையை மேம்படுத்த வேண்டும் என்று ஆன்லைன் உணவு வினியோக நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.;
புதுடெல்லி,
ஆன்லைன் மூலம் ஆர்டர் பெற்று உணவு வினியோகம் செய்யும் நிறுவனங்களான ஸ்விக்கி, சொமட்டோ ஆகிய நிறுவனங்கள் மீது பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன. கடந்த 12 மாதங்களில் தேசிய நுகர்வோர் உதவி மைய எண்ணில் 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டன.
உணவு தொகையில் என்னென்ன கட்டணங்கள் சேர்க்கப்பட்டன என்பது பற்றி வெளிப்படைத்தன்மை இல்லாதது, வினியோகத்தில் தாமதம், உணவு அளவில் வேறுபாடு உள்ளிட்ட புகார்கள் கூறப்பட்டுள்ளன.
இந்தநிலையில், மேற்கண்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளை நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் ரோகித்குமார் சிங் நேற்று அழைத்து பேசினார். அப்போது, நுகர்வோர் குறைதீர்ப்பு முறையை மேம்படுத்துவது குறித்த திட்டத்தை 15 நாட்களில் சமர்ப்பிக்குமாறு அந்நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார். மேலும், உணவு தொகையில் என்னென்ன கட்டணங்கள் சேர்க்கப்பட்டன என்பதை வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும் என்றும் கூறினார்.