'கவர்னர் பதவி வெறும் அரசியல் சட்ட பதவி மட்டுமே' - ப.சிதம்பரம்

அதிகார அத்துமீறலில் ஈடுபட்ட கவர்னர்கள் ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கிறார்கள் என ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2023-04-08 00:33 GMT

புதுடெல்லி,

பா.ஜனதா நியமித்த கவர்னர்கள், அதிகார அத்துமீறலில் ஈடுபட்டு ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கிறார்கள் என்று ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். மசோதாவை கவர்னர் நிலுவையில் வைத்திருந்தால், அதை நிராகரித்ததாகவே அர்த்தம் என்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார். அதற்கு தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

"சட்டசபை நிறைவேற்றிய மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பதற்கு வினோதமான விளக்கத்தை தமிழ்நாடு கவர்னர் கூறியிருக்கிறார். அப்படி நிலுவையில் வைத்திருந்தால், மசோதா செத்து விட்டதாக அர்த்தம் என்று சொல்கிறார்.

உண்மையில், ஒரு கவர்னர் உரிய காரணம் இன்றி மசோதாவை முடக்கி வைத்திருந்தால், நாடாளுமன்ற ஜனநாயகம் செத்து விட்டதாக அர்த்தம். கவர்னர் என்பவர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம் அல்லது நிலுவையில் வைக்கலாம் அல்லது மசோதாவை திருப்பி அனுப்பலாம். அதே மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டால், அவர் ஒப்புதல் அளித்தாக வேண்டும்.

கவர்னர் பதவி, வெறும் அரசியல் சட்ட பதவி மட்டுமே. அரசின் அடையாள தலைவராக அவர் இருப்பார். அவரது அதிகாரங்கள் குறைவு. பெரும்பாலான விவகாரங்களில் அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை.

முதல்-மந்திரி மற்றும் மந்திரிசபையின் ஆலோசனையின்பேரில்தான் கவர்னர் செயல்பட வேண்டும். ஆனால், பா.ஜனதாவால் நியமிக்கப்பட்ட கவர்னர்கள், அதிகார அத்துமீறலில் ஈடுபட்டு, ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கிறார்கள்."

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்