சமூகத்தின் வளர்ச்சியில் தன்னார்வலர்களின் பங்கு முக்கியமானது; கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேச்சு

மூடபித்ரியில் நடந்த சாரணர் படை மாநாட்டில் பேசிய கவர்னர் தாவர்சந்த் கெலாட் சமூகத்தின் வளர்ச்சியில் தன்னார்வலர்களின் பங்கு முக்கியமானது என்று கூறினார்.

Update: 2022-12-22 18:45 GMT

மங்களூரு:

மூடபித்ரியில் நடந்த சாரணர் படை மாநாட்டில் பேசிய கவர்னர் தாவர்சந்த் கெலாட் சமூகத்தின் வளர்ச்சியில் தன்னார்வலர்களின் பங்கு முக்கியமானது என்று கூறினார்.

சாரணர் படை மாநாடு

தட்சிண கன்னடா மாவட்டம் மூடபித்ரி தாலுகா ஆல்வாஸ் வளாகத்தில் சர்வதேச கலாசார மற்றும் சாரணர் படை மாநாடு நடந்தது. மாநாட்டை கவர்னர் தாவர் சந்த் கெலாட் தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

இந்த சர்வதேச மாநாட்டில் ஆயிரக்கணக்கான சாரணர்கள், வழிகாட்டிகள், ரோவர்ஸ்கள், ரேஞ்சர்கள், மாணவர்கள் மற்றும் நாட்டின் பல்வேறு பிரிவு தலைவர்கள், வெளிநாட்டினர் கலந்து கொண்டுள்ளனர். வருகிற 27-ந் தேதி வரை இந்த மாநாடு மற்றும் கலாசார நிகழ்ச்சி நடக்கிறது.

பங்களிப்பு

பல கலைஞர்கள் நாட்டின் மற்றும் மாநிலத்தின் வரலாறு, பாரம்பரியத்தை வெளிப்படுத்தி வருவது பாராட்டுக்குரியது. ஒரு பொறுப்புள்ள குடிமகனாக நாட்டுக்கு சேவை செய்யவும், பொது நலனுக்கு பங்களிக்கவும் ஒவ்வொரு நபராலும் முடியும். கர்நாடக மாநிலத்தில் சாரணர் மற்றும் வழிகாட்டி செயல்பாடுகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. கடந்த 100 ஆண்டுகளில் 7 லட்சம் தன்னார்வலர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.

'தயாராக இருங்கள் மற்றும் சேவை செய்யுங்கள்' என்ற அமைப்பின் பொன்மொழியை நிறைவேற்றும் வகையில், தன்னார்வலர்கள் அரசின் முக்கியமான திட்டங்களை செயல்படுத்துவதிலும், சமூகத்தின் அனைத்துத் துறை வளர்ச்சியிலும் பங்களிப்பை செய்து வருகின்றனர்.

தன்னலமற்ற சேவை

கொரோனா போராளிகளின் சேவை பாராட்டத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மேம்படுத்த 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த 25 ஆண்டுகால பயணம் புதிய இந்தியாவுக்கான பொற்காலமாக இருக்கும்.

சாரணர்கள் மற்றும் வழிகாட்டிகளின் அசாத்திய தைரியம், உறுதிப்பாடு மற்றும் தன்னலமற்ற சேவை ஆகியவை பாராட்டுக்குரியது.

இவ்வாறு அவர் கூறினார்.

கலாசார ஊர்வலம்

நிகழ்ச்சியில் தர்மஸ்தலா தர்மாதிகாரி வீரேந்திர ஹெக்டே, கூடுதல் தலைமை தேசிய ஆணையரும், மாநில ஆணையருமான(சாரணர்) காலித், மாவட்ட முதன்மை ஆணையர் பாரத், சாரணர் மற்றும் வழிகாட்டிகளின் தட்சிண கன்னடா மாவட்ட நிர்வாகி மோகன் ஆல்வா உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியையொட்டி கலாசார ஊர்வலம் நடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்