ராஜஸ்தானில் அரசின் தூண்டி விடுதல், சமரச கொள்கையால் வகுப்புவாத கலவரம்; பா.ஜ.க. குற்றச்சாட்டு
ராஜஸ்தானில் அரசின் தூண்டி விடுதல் மற்றும் சமரச கொள்கை ஆகியவற்றால் வகுப்புவாத கலவரம் ஏற்பட்டு உள்ளது என பா.ஜ.க. முன்னாள் முதல்-மந்திரி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.;
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் தன்மண்டி பகுதியில் பூட்மகால் என்ற இடத்தில் தையல் கடை நடத்தி வருகிற தையல்காரர் கன்னையா டெலி (வயது 40). இவர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கருத்து வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அவருக்கு கொலை மிரட்டல் வந்து, அவர் போலீசில் புகார் செய்ததாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் 2 பேர் கூர்மையான கத்திகளுடன் கன்னையா டெலி கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்திறங்கினர். அவர்கள் தாங்கள் எடுத்து வந்த கத்திகளால் அவரது கழுத்தை அறுத்து தலையை துண்டித்தனர். இதில் அவர் உயிரிழந்து உள்ளார். இதனை தொடர்ந்து கொலையாளிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி விட்டனர்.
இந்த கொலைக்காட்சிகளை கொலையாளிகளே வீடியோவாக படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த சம்பவத்தினை தொடர்ந்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. உள்ளூர் சந்தைகள் மூடப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டன. கொலையாளிகளை கைது செய்யக்கோரி உளளூர்வாசிகள் போராட்டம் நடத்தினர். இந்த படுகொலைக்கு முதல்-மந்திரி அசோக் கெலாட் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனையொட்டி அவர் வெளியிட்ட அறிக்கையில், இது வேதனையான, வெட்கக்கேடான சம்பவம் ஆகும். நாட்டில் தற்போது பதற்றமான சூழல் நிலவுகிறது. பிரதமரும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் நாட்டு மக்களுக்கு உரையாற்றக்கூடாதா? இந்த படுகொலை சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளை பகிர்ந்து கொண்டு, நிலைமையை மோசமாக்கி விட வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என கூறி உள்ளார்.
இதனை தொடர்ந்து, உதய்பூர் மாவட்டத்தில் 24 மணி நேரத்துக்கு இணையதள சேவை முடக்கி வைக்கப்பட்டது.
இந்த படுகொலையை நடத்திய கொலையாளிகள் ராஜ்சமந்த் மாவட்டத்தின் பீம் பகுதியில் வைத்து நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.
ராஜஸ்தானில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் ஒரு மாதத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவையும் ராஜஸ்தான் அரசு அமைத்து உள்ளது.
ராஜஸ்தானின் உதய்பூர் பிரிவு ஆணையாளர் ராஜேந்திர பட், மக்கள் அமைதியை காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். கன்னையாவின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் பட் கூறியுள்ளார். ராஜஸ்தானின் ஒவ்வொரு மாவட்டத்திலும் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், பா.ஜ.க. முன்னாள் முதல்-மந்திரியான வசுந்தரா ராஜே கூறும்போது, ராஜஸ்தான் அரசின் தூண்டி விடுதல் மற்றும் சமரச கொள்கை ஆகியவற்றால் குற்றவாளிகள் ஊக்கம் பெறுகின்றனர். அரசின் இந்த கொள்கைகளால், சமூகவெறி மற்றும் வன்முறை ஆகியவை ராஜஸ்தானில் அதிகரித்து உள்ளன. இந்த சம்பவத்திற்கு பின்னணியில் உள்ள மக்கள் மற்றும் அமைப்புகள் வெளிப்படுத்தப்பட்டு, அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என ராஜே கூறியுள்ளார்.