எதிர்க்கட்சி எம்.பிக்களின் ஐபோன்களுக்கு எச்சரிக்கை மெசேஜ்? விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு

அச்சுறுத்தல் நுண்ணறிவு சிக்னல்கள் அடிப்படையில் இந்த அலார்ட் வந்ததாகவும் இது அடிக்கடி தவறானதாகவும் முழுமையற்றதாகவும் இருக்கலாம் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.

Update: 2023-10-31 15:04 GMT

புதுடெல்லி,

எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த அகிலேஷ் யாதவ், சீதாராம் யெச்சூரி, மஹுவா மொய்த்ரா, பிரியங்கா சதுர்வேதி, சசி தரூர், ராகுல் சத்தா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களின் ஆப்பிள் செல்போன்களுக்கு இன்று அதிகாலை எச்சரிக்கை மெசேஜ் வந்துள்ளது. அதில், 'உங்கள் கைபேசி மீது தாக்குதல் நடக்கலாம், அதில் உள்ள தகவல்கள் திருடப்படலாம்' என்று குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து எதிர்க்கட்சிகளின் செல்போன் மத்திய அரசால் ஒட்டுகேட்கப்படுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் எச்சரிக்கை குறுஞ்செய்தி குறித்து ஆப்பிள் நிறுவனம் விளக்கம் தெரிவித்துள்ளது. அதில், 'இந்த அச்சுறுத்தல் மெசேஜ் எந்தவொரு அரசையும் குறிப்பிடவில்லை. அரசு ஆதரவு செல்போன் தாக்குதல்கள் அதிக நிதியுடன் நவீன தொழில்நுட்பத்துடன் செயல்படும், மேலும் அந்த தொழில்நுட்பம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கும்.

aஇத்தகைய தாக்குதல்களைக் கண்டறிவது முழுமையற்றதாக சரியற்றதாக இருக்கும், ஆப்பிளின் சில அச்சுறுத்தல் அறிவிப்புகள் தவறானதாகக்கூட இருக்கலாம், சில தாக்குதல்கள் கண்டறியப்படாமல்கூட இருக்கலாம். எதிர்க்கட்சியினருக்கு அனுப்பப்பட்ட இந்த எச்சரிக்கை செய்திக்கான காரணம் குறித்த தகவல்களை எங்களால் வழங்க முடியாது. ஏனெனில் எதிர்காலத்தில் அரசு தரப்பில் நடத்தப்படும் செல்போன் தாக்குதல்களை கண்டறியாமல் போவதற்கு இது உதவக்கூடும்' என்று விளக்கம் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், இது குறித்து மத்திய அரசு தனது விளக்கத்தை அளித்துள்ளது. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருப்பதாவது:- விசாரணைக்கு நாங்கள் உத்தரவிட்டுள்ளோம். எச்சரிக்கை மெசேஜ் வந்தவர்கள் அனைவரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அச்சுறுத்தல் நுண்ணறிவு சிக்னல்கள் அடிப்படையில் இந்த அலார்ட் வந்ததாகவும் இது அடிக்கடி தவறானதாகவும் முழுமையற்றதாகவும் இருக்கலாம் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. 150 நாடுகளில் இதுபோன்ற நோடிபிகேஷன் சென்றுள்ளது. பிரியங்கா சதுர்வேதி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மஹூவா மொய்தரா ஆகியோர் பிரதமர் மோடியை விமர்சித்தே ஆக வேண்டும் என விமர்சிப்பவர்கள். நாட்டின் வளர்ச்சியை இவர்கள் அனைவரும் பார்க்க விரும்பாதவர்கள். இது போன்று விமர்சிப்பர்வர்கள் ஆக்கப்பூர்வமான அரசியலை செய்வது இல்லை. பெரிய விவகாரங்கள் எதுவும் இல்லை என்றால், இது போன்ற பிரச்சினையை எழுப்புவார்கள்" என்று சாடியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்