அரசு பஸ் கவிழ்ந்து விபத்து; 21 பேர் படுகாயம்
மடிகேரி அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்தில் 21 பேர் படுகாயம் அடைந்தனர்.;
குடகு;
குடகு மாவட்டம் மடிகேரியில் இருந்து மைசூருவுக்கு கர்நாடக அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் பொய்கேரி பகுதியில் சென்றபோது, டிரைவர் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிள் ஒன்று வந்துள்ளது.
இதனால், அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க டிரைவர் பஸ்சை திருப்பி உள்ளார். இதன்காரணமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 21 பயணிகள் பலத்த காயம் அடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக வந்தவர்கள், காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பொய்கேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து காரணமாக அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.