கூகுள் நிறுவனத்திற்கு ரூ.1,337 கோடி அபராதம்; இந்திய போட்டியாளர் ஒழுங்கமைப்பு ஆணையம் நடவடிக்கை

கூகுள் நிறுவனத்திற்கு இந்திய போட்டியாளர் ஒழுங்கமைப்பு ஆணையம் எனப்படும் சி.சி.ஐ. அமைப்பு ரூ.1,337 கோடி அபராதம் விதித்து உள்ளது.;

Update: 2022-10-20 16:17 GMT



புதுடெல்லி,


உலகம் முழுவதும், தேவைப்படும் தகவல்களை எப்போது தேடினாலும் உடனடியாக பதில் அளிக்கும் பணியை கூகுள் நிறுவனம் செய்து வருகிறது. அந்நிறுவனம் ஆண்டிராய்டு என்ற இயங்கு தளம் ஒன்றை இயக்கியும், அதன் மேலாண் பணிகளை செய்தும் வருகிறது.

வேறு சில செயலிகளுக்கும் உரிமம் பெற்றவராக செயல்படுகிறது. மொபைல் போன் போன்ற சாதனங்களை தயாரிப்பவர்கள், தங்களது மொபைல் போன் சாதனங்களில் கூகுளின் செயலிகள் மற்றும் அதன் இயங்கு தளம் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். இதற்காக பல்வேறு ஒப்பந்தங்களும் போடப்படுகின்றன.

இவற்றில் ஒன்றாக, தேடுதல் செயலி, குரோம் பிரவுசர்கள் உள்ளிட்டவை ஆண்டிராய்டு சாதனங்களில் முன்பே நிறுவப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. இதனால், கூகுள் நிறுவனத்தின் போட்டியாளர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என இந்திய போட்டியாளர் ஒழுங்கமைப்பு ஆணையம் எனப்படும் சி.சி.ஐ. அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனினும், கூகுள் நிறுவனம் கூறும்போது, போட்டியாளர்கள் ஆப்பிள் நிறுவனத்தினரால் தடைகளை எதிர்கொள்கின்றனர் என்ற வாதத்தினை முன் வைத்துள்ளது.

இதுபற்றி சி.சி.ஐ. அமைப்பு கூறும்போது, இந்த இரு நிறுவனங்களின் வர்த்தக மாதிரிகள் வேறுபடுகின்றன. ஆப்பிள் நிறுவனம் உயர்ந்த, தரமுள்ள சாதனங்களை விற்பனை செய்வதில் கவனம் செலுத்துகிறது. அதற்கு நவீன மென்பொருள் பொருட்களையும் பயன்படுத்தி கொள்கிறது.

ஆனால், கூகுள் நிறுவனத்தின் வர்த்தகம் ஆனது, தனது தளங்களில் பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்குடன் செயல்படுகிறது. அதனால், வருவாய் ஈட்ட கூடிய, ஆன்லைனில் தேடுதல் போன்ற சேவைகளில் ஈடுபடுகிறது.

இதனால், ஆன்லைன் வழியேயான பிற விளம்பர சேவைகளின் விற்பனையை நேரடியாக கூகுள் நிறுவனம் பாதிக்கிறது என சி.சி.ஐ. அமைப்பு தெரிவித்து உள்ளது. இதன் தொடர்ச்சியாக, கூகுள் நிறுவனத்திற்கு சி.சி.ஐ. அமைப்பு ரூ.1,337 கோடி அபராதம் விதித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்