கேரளாவில் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் கட்சிகள் மலிவான அரசியல் நடத்துகின்றன : ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் கட்சிகள் மலிவான அரசியல் நடத்துகின்றன என்று ஜே.பி.நட்டா குற்றம் சாட்டினார்.;
திருவனந்தபுரம்,
மோடி அரசின் 9 ஆண்டுகள் நிறைவையொட்டி, கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் நேற்று பா.ஜனதா பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
கேரள மாநிலம், 'கடவுளின் சொந்த தேசம்' என்று அழைக்கப்படுகிறது. கேரள மக்கள், அன்பானவர்கள், கடின உழைப்பாளிகள். ஆனால், இதை ரத்த ஆறு ஓடும் மாநிலமாக மாற்றி விட்டார்கள்.
நாட்டின் வளர்ச்சியில் கேரளா மிகப்பெரிய பங்கு வகித்துள்ளது. ஆனால், அதை சரியாக எடுத்துச் சொல்லவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரஸ் கூட்டணிகள் நடத்தும் மலிவான அரசியலால், கேரள மக்களின் நல்ல பணிகள் சிதைக்கப்பட்டு வருகின்றன.
முட்டுக்கட்டை
அறிவுஜீவிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவது வேதனை அளிக்கிறது. மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு இத்தகைய சம்பவங்கள் முட்டுக்கட்டையாக உள்ளன. எனவே, சிந்தனையை நசுக்கும் சக்திகளை எதிர்க்கவும், மாநிலத்தின் முன்னேற்றத்துக்காக பாடுபடுபவர்களை ஆதரிக்கவும் சரியான நேரம் வந்துள்ளது என்று அவர் பேசினார்.