மங்களூரு விமான நிலையத்தில் ரூ.90 லட்சம் தங்கம் சிக்கியது

துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமான நிலையத்தில் கடத்திய ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2023-02-03 20:55 GMT

மங்களூரு:-

ரூ.90 லட்சம் தங்கம்

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பஜ்பே பகுதியில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையில் துபாயில் இருந்து மங்களூருவுக்கு நேற்றும், நேற்று முன்தினமும் 2 விமானங்கள் வந்தன. அந்த விமானங்களில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது 5 பேரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் அவர்கள் 5 பேரையும் தனியாக அழைத்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் தங்களின் உடைமைகளில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து ரூ.90 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பிலான ஒரு கிலோ 617 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துகொண்டனர். இதையடுத்து அவர்கள் 5 பேரையும் அதிகாரிகள் பஜ்பே போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர்.

வெளிநாட்டு சிகரெட்

இந்த நிலையில் துபாயில் இருந்த வந்த விமானத்தில் மங்களூரு வந்த ஒருவர் வெளிநாட்டு சிகரெட்டுகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.6.42 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த நபரை பஜ்பே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்